glenn phillips blackcaps
கிரிக்கெட்

5வது டி20| இந்தியாவை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து.. பிலிப்ஸ் படைத்த World Record!

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

Rishan Vengai

5வது டி20 போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அதிரடியாக வீழ்த்தியது. கிளென் பிலிப்ஸ் 65 ரன்கள் அடித்து, ஒரு டி20 தொடரில் 341 ரன்களுடன் உலக சாதனை படைத்தார். தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் 93 ரன்கள் அடித்து அசத்தியதால், 192 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது நியூசிலாந்து.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில், முதல் 3 ஆட்டத்திலும் வெற்றிபெற்ற இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றியது. சொந்தமண்ணில் தொடரை இழந்தபிறகு கடைசி 2 போட்டிகளில் கம்பேக் கொடுத்த நியூசிலாந்து இந்திய அணிமீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களான சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அரைசதமடிக்க 20 ஓவரில் 191 ரன்களை சேர்த்தது இந்தியா.

192 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி எளிதாக வெற்றிபெற்றது. தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் 93 ரன்கள் அடித்து அசத்த, தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிவந்த கிளென் பிலிப்ஸ் இந்த போட்டியிலும் அரைசதமடித்து அசத்தினார்.

முதலிரண்டு போட்டிகளிலும் அரைசதமடித்த பிலிப்ஸ், 4வது போட்டியில் சதமடித்து மிரட்டினார். தொடர்ந்து 5வது டி20 போட்டியிலும் 65 ரன்கள் அடிக்க, ஒரு டி20 தொடரில் 341 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்த வீரராக உலகசாதனை படைத்தார்.