கால்பந்து வரலாற்றில் இதுவரையிலும் அதிகபட்சமாக 32 அணிகளே கலந்துகொண்ட உலகக் கோப்பையில் இந்த முறை 48 நாடுகள் திறமையைக் காட்டப்போகின்றன.
கால்பந்து வரலாற்றில் இதுவரையிலும் அதிகபட்சமாக 32 அணிகளே கலந்துகொண்ட உலகக் கோப்பையில் இந்த முறை 48 நாடுகள் திறமையைக் காட்டப்போகின்றன. கியுராசாவ் எனும் குட்டிநாடு தொடங்கி நடப்புச் சாம்பியனான அர்ஜென்டினா அணி வரை அனைத்து அணிகளின் ஆட்டமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குழுநிலை, 32 அணிகளுக்கான நாக்அவுட்சுற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி, பட்டத்தைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி எனப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்னும் ஆறு அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டது. 39 நாட்கள் நடைபெறும் இந்த மெகா தொடரை, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.
ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை 104 போட்டிகள் கால்பந்து ரசிகர்களுக்கு விளையாட்டு விருந்தளிக்க உள்ளன. கால்பந்து ரசிகர்களின் ஆரவாரம் 16 நகரங்களில் எதிரொலிக்கப் போகிறது. சில பிரிவுகள் மிகுந்த கவனத்தை ஈர்க்கின்றன. போட்டியை நடத்தும் மெக்சிகோ, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஏ பிரிவில் உள்ளது. பி பிரிவில் கனடா, கத்தார், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. சி பிரிவில் ஐந்து முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில்அணியுடன் ஆப்பிரிக்கச் சிங்கம் எனவர்ணிக்கப்படும் மொராக்கோ அணிஉள்ளது. ஸ்காட்லாந்து, ஹைதிஅணிகளும் இந்தப் பிரிவில் உள்ளன. இந்தப் பிரிவின் ஆட்டக் களத்தில் அக்னிப் பரீட்சை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ பிரிவில் நார்வே, பிரான்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
பிரான்ஸ் அணிக்கு, நார்வே அணியின் கோல் எந்திரமான நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்து சவாலாக உள்ளார். இவர்களுடன் செனகல் அணியும் சேர்ந்திருப்பது, ஐ பிரிவை ஒரு மரண மாஸ் குழுவாக மாற்றியுள்ளது. நடப்புச் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு அத்தனை போட்டியில்லை. அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் அதன்பிரிவில் இடம்பெற்றுள்ளன. எல் பிரிவில் இங்கிலாந்து, குரேஷியா அணிகள் இடம்பெற்றுள்ளன. 2018-ஆம் ஆண்டு அரையிறுதியில் வாங்கிய தோல்விக்குப் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது இங்கிலாந்து அணி. மெஸ்ஸி, ரொனால்டோ, எம்பாப்வே, யாமல் என நட்சத்திர நாயகர்களின் கால்வித்தையை காண கோடான கோடி கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.