ஹாமில்டனில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மழை காரணமாக டாஸ் தாமதமாகிய நிலையில், நியூசிலாந்து இந்த மைதானத்தில் 12 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதிக்கம் இந்திய அணிக்கு சவாலாக உள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில், 3-2 என இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-0 என வெற்றிபெற்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடக்கிறது.
7 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில், அப்பகுதியில் மழை பெய்துவருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப்போட்டியில் வென்று தொடரை வெல்லுமா இந்தியா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி நடைபெறும் ஹாமில்டனில் உள்ள செட்டன் பார்க்கில், கடைசியாக விளையாடிய 12 ஒருநாள் போட்டிகளிலும் வென்று நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு நியூசிலாந்து கடைசியாக ஒருநாள் போட்டியில் தோற்றது, 2017 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மழை காரணமாக ஆட்டம் 34 ஓவர்களாகக் குறைக்கப்பட்டபோதுதான்.
அதேபோல இந்த மைதானத்தில் இதுவரை 8 முறை இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியிருக்கும் நிலையில் 6-1 என நியூசிலாந்து வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, எந்த இருதரப்பு ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியிலும் ரோஹித் சர்மா மூன்று அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். அவருடைய சராசரி 103.2 இருக்கிறது.