FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளுக்குநாள் சுவாரஸ்யம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், ஒரு நாட்டுக்காகப் பிறநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், 48 அணிகளில் வெறும் 8 அணிகள் மட்டுமே தங்கள் நாட்டிலேயே பிறந்த வீரர்களைக் கொண்டிருக்கும் நிலையில், பிற அணிகளில், ஒவ்வொரு நான்கு வீரர்களில் ஒருவராவது வேறு நாட்டில் பிறந்தவர்களாக உள்ளனர். அதாவது, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் மொத்தமுள்ள 1,248 வீரர்களில்,310 பேர் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள் ஆவர். இதற்கு முக்கியக் காரணம் புலம்பெயர்வு (Migration) மற்றும் இரட்டைக் குடியுரிமை ஆகும். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தளர்வான தகுதி விதிகளால், வெளிநாட்டில் பிறந்த வீரர்களின் பங்களிப்பு 2006இல் 9 சதவீதத்துக்கும் குறைவாக இருந்து, தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் பிரான்ஸ் நாடு அதிகபட்ச வீரர்களை மற்ற நாடுகளுக்கு வழங்கி முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸில் பிறந்த 76 பேர் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடுகின்றனர்.
குறிப்பாக அல்ஜீரியா, செனகல், ஹெய்டி, காங்கோ குடியரசு போன்ற அணிகளில் பிரான்சில் பிறந்த பல வீரர்கள் உள்ளனர். குராசோ அணியில் உள்ள 26 வீரர்களில் 25 பேர் நெதர்லாந்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காங்கோ குடியரசு அணியில் 26 வீரர்களில் 25 வேறுநாடுகளில் பிறந்தவர்கள் ஆவர். அடுத்து மொராக்கோ அணியில் 19 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்களாக உள்ளனர். மேலும், பல ஆப்பிரிக்க நாடுகள், தங்கள் ஐரோப்பிய புலம்பெயர் சமூகங்களிலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளன. அதேபோல், FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிக்க இந்தியாவின் கனவு தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
நியூசிலாந்தின் சர்பிரீத் சிங், கத்தாரின் தாசின் முகமது ஜம்ஷித், டிஆர்காங்கோவின் சாமுவேல் முத்துசாமி மற்றும் ஆஸ்திரேலியாவின் நிஷான் வேலுப்பிள்ளை ஆகியோர்தான் தத்தம் நாடுகளுக்காக விளையாட இருப்பினும், அவர்கள் இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இந்த உலகக்கோப்பை தொடர், வெறும் கால்பந்து போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல், குடியுரிமை மற்றும் உலகமயமாக்கலின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது.