ஐசிசியின் அடுத்த மிகப்பெரிய கோப்பையாக பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது இந்தாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி நடக்கவிருக்கிறது. 2023 ஒருநாள் கோப்பையை இறுதிப்போட்டிவரை சென்று கோட்டைவிட்ட இந்திய அணி, 2025 சாம்பியன்ஸ் டிரோபியை குறிவைத்துள்ளது.
ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கும் நிலையில், குரூப் ஏ-ல் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் முதலிய அணிகளும், குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மிகப்பெரிய ஐசிசி தொடருக்கு முன்னதாக அனைத்து நாடுகளும் தங்களுடைய அணிகளை அறிவித்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலையளிக்கும் காரணங்களாக மூன்று விசயங்கள் பார்க்கப்படுகின்றன.
சாம்பியன்ஸ் டிரோபிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா
இந்திய அணியின் ஸ்குவாடில் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூன்று வீரர்களே இடம்பெற்றுள்ளன. இதில்,
பும்ரா - தற்போது பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பிறகு முதுகுப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 9 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் பும்ராவின் முழு உடற்தகுதி சாம்பியன்ஸ் டிரோபியின் பாதியில் சரியில்லாமல் போனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்திவிடும். 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஷமிக்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் தொடர்ந்து வீசமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி - 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு பிறகு இரண்டு அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட முகமது ஷமி, ஒரு வருடத்திற்கு பிறகு தான் களத்திற்கு திரும்புகிறார். அவர் முழு உடற்தகுதியை எட்டிவிட்டாரா, அதே ரிதமுடன் அவரால் பந்துவீச முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.
அர்ஷ்தீப் சிங் - இந்திய அணியில் தற்போது ஃபார்மில் இருக்கும் ஒரே பவுலராக இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மட்டுமே இருக்கிறார். இருக்கும் சூழ்நிலைகளை வைத்து பார்த்தால் சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியாவை லீட் செய்யும் வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கே இருக்கப்போகிறார்.
இருக்கும் பெரிய சிக்கல்? - துபாய் போன்ற ஆடுகளத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பது கட்டாயத் தேவையாக இந்திய அணிக்கு இருக்கவிருக்கிறது. அதனால் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், பும்ரா மூன்று பவுலர்களும் காயம் ஏற்படாமல் இருக்கவேண்டியது கட்டாயம். இல்லையென்றால் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு பந்துவீச்சு பொறுப்பு அதிகமாகிவிடும். ஒருநாள் உலகக்கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறியதும் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்பதை மறந்துவிட முடியாது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவிந்திர ஜடேஜா மற்றும் வாசிங்டன் சுந்தர் என நான்கு ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருந்தாலும், அக்சர் மற்றும் ஜடேஜா இருவரும் இடதுகை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர்களாகவும், குல்தீப் யாதவ் சைனமேன் ஸ்பின்னராகவும் இருக்கின்றனர். அந்தவகையில் அணியில் இருக்கும் ஒரேயொரு ஆஃப் ஸ்பின்னராக வாசிங்டன் சுந்தர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
இந்தியா மோதவிருக்கும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து முதலிய அணிகளில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில் வாசிங்டன் சுந்தர் அணியில் இருக்க வேண்டியது கட்டாயம். ஒருவேளை அவர் அணியில் எடுக்கப்பட்டால் இந்தியாவின் பேட்டிங் வலுவானதாக இருப்பது கேள்விக்குறியாகிவிடும்.
அணியில் 6 பவுலிங் ஆப்சன் இருக்கவேண்டியது இந்தியாவிற்கு கூடுதல் பலமாக இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக வாசிங்டன் சுந்தர் விளையாட வைக்கப்பட்டால், அவரால் பேட்டிங்கில் சிறப்பாக பங்களிக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. அக்சர் பட்டேல் 2024 டி20 உலகக்கோப்பையில் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிரோபிக்கான இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் இரண்டு வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு வீரர்களும் அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாகவே இருக்கும்.
ஜெய்ஸ்வால் - தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறவேண்டுமென்றால் சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஆனால் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால் அவரை அணியிலிருந்து டிராப் செய்வது என்பது மிகப்பெரிய கேள்வி.
ஒருவேளை ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் இடம்பெறவேண்டுமென்றால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாறுபடும், அது அணிக்கு சரியான பேலன்ஸை எடுத்துவருமா என்ற குழப்பமும் நீடிக்கிறது.
ரிஷப் பண்ட் - என்னதான் ரிஷப் பண்ட் 2024 டி20 உலகக்கோப்பையில் நேரடியாக இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பேட்டிங் மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். அதனால் இந்தியாவின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலே முதல் தேர்வாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படியானால் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறவில்லை என்றால் டாப் 6-ல் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என ஒரு இடதுகை பேட்ஸ்மேன்கள் கூட இடம்பெற மாட்டார்கள். மாறாக ஆல்ரவுண்டர்களான அக்சர் பட்டேல் மற்றும் ரவிந்திர ஜடேஜாவிடம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். டி20 உலகக்கோப்பையில் அக்சர் பட்டேல் நம்பர் 4, 5-ல் விளையாடியிருந்தாலும் அந்த ஃபார்மேட்டும், ஒருநாள் ஃபார்மேட்டும் வெவ்வேறு என்பதால், அது எந்தளவு சரியானதாக இருக்கும் என்ற குழப்பமும் நீடிக்கிறது.
அக்சர் பட்டேல் சிறந்த ஃபார்மில் இருந்துவருவது இந்திய அணிக்கு பேட்டிங்கில் பாசிட்டிவான விசயமாக இருந்தாலும், எதிரணியில் வலுவான இடதுகை வீரர்கள் இருப்பது ஆஃப் ஸ்பின்னர் இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்துவிடும். டிராவிஸ் ஹெட் என்ற ஒரு இடதுகை வீரரை அவுட்டாக்கமுடியாமல் இந்தியா திணறியதை யாராலும் மறக்கமுடியாது.
லீக் போட்டிகள் வெறும் 3-ஆக இருக்கும் பட்சத்தில் உங்களால் பெரிய பரீட்சைகளை மேற்கொள்ள முடியாது. அதனால் இந்த 3 கவலைகளையும் இந்தியா எப்படி சமாளித்து கோப்பையை வெல்லபோகிறது என்ற பெரிய கவலை எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியால், 2025 சாம்பியன்ஸ் டிரோபியையும் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.