சிறந்த IPL கேப்டனாக தோனி, ரோகித் உடன் பண்ட் பெயரும் சொல்லப்படும்.. LSG ஓனர் நம்பிக்கை!
2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.27 கோடிக்கு ஏலம்போன இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், ஐபிஎல் வரலாற்றில் அதிகவிலைக்கு சென்ற வீரராக இடம்பிடித்தார். அவரை ரூ.27 கோடிக்கு டெல்லி அணியிடமிருந்து தட்டித்தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
ரிஷப் பண்ட்டின் வருகைக்கு பிறகு நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஸ், ஆயுஸ் பதோனி, அப்துல் சமாத், மயங்க் யாதவ், ரவி பிஸ்னோய் என 2025 ஐபிஎல் தொடருக்கு வலுவான அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம்.
ரிஷப் பண்ட் சிறந்த ஐபிஎல் கேப்டனாக மாறுவார்..
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு LSG அணியின் ஜெர்சியை பண்ட்டிற்கு உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா வழங்கினார்.
தொடர்ந்து உரையாடல் ஒன்றில் ரிஷப் பண்ட் குறித்து பேசிய அவர், “ரிஷப் பண்ட் எல்எஸ்ஜியின் சிறந்த வீரராக மட்டும் இருக்கப் போவதில்லை, அவர் ஐபிஎல்லின் சிறந்த வீரராக இருக்கப் போகிறார். கிரிக்கெட்டில் இவ்வளவு பேரார்வம் கொண்ட ஒருவரை பார்த்ததில்லை. அவர் பக்கத்து வீட்டு பையனை போல வீரர்களுடனும், அணியுடனும் சிறப்பான முறையில் சேர்ந்து பயணிக்கிறார். அவருடைய சிந்தனையே இயல்பாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது.
நாங்கள் அவரை விலைக்கு வாங்க 27 கோடி வரை ஐபிஎல் ஏலத்தில் திட்டம் வைத்திருந்தோம். பண்ட் ஐபிஎல்லின் சிறந்த கேப்டனாக நிச்சயம் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னும் 10-12 வருடங்களுக்கு பிறகு சிறந்த கேப்டன்களாக தோனி, ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட்டின் பெயரும் சொல்லப்படும் பாருங்கள்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.