1983 vs 2023 match
1983 vs 2023 match Twitter
கிரிக்கெட்

1983 Vs 2023 | அன்று கபில் தேவ்-க்கு ஒரு கிர்மானி.. இன்று மேக்ஸ்வெல்-க்கு துணையாக நின்ற கம்மின்ஸ்!

Rajakannan K

மேக்ஸ்வெல்லின் நேற்றைய ஆட்டம் எல்லோருக்கும் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கபில் தேவ் ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்தியிருக்கும். 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை தனி ஒரு ஆளாக போராடி 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வந்திருப்பார் கபில். அப்படி ஒரு வெறித்தனமான ஆட்டம்.

கபில் தேவ் அப்படி ஆடி அதுவரை உலகம் பார்த்தே இருக்காது. அதேபோல் நேற்று, 91 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகள் வீழ்ந்த ஆஸ்திரேலிய அணி மீட்பராக நின்று கரை சேர்த்தார் க்ளென் மேக்ஸ்வெல்.
கபில்தேவ் - மேக்ஸ்வெல்

நிச்சயம் நம்புவதற்கே ஒரு அரிதான ஆட்டம்தான் கபில் தேவ் மற்றும் மேக்ஸ்வெல் இருவருடைய ஆட்டமும். இருவருக்குமே ஒப்பிடுவதற்கு சாதக பாதகங்கள் இருந்தது. கபில் தேவ் ரெகுலர் பேட்ஸ்மேன் கிடையாது. அவர் வேகப்பந்து வீச்சாளர்தான். கிட்டதட்ட ஒரு ஆல் ரவுண்டர். முக்கியமான எல்லா வீரர்களும் ஆட்டமிழந்துவிட்ட பின்னரும் இறுதிவரை போராடினார். 8 விக்கெட் பறிபோன பிறகும் கூட கடைசி விக்கெட்டுக்கு 120 ரன்களுக்கு மேல் சேர்த்தார்.

அதேபோல், மேக்ஸ்வெல் நேற்று காலில் ஏற்பட்ட வலியால் மிகுந்த வேதனை உடன் விளையாடினார். வலியால் துடிதுடித்து மைதானத்திலேயே படுத்துக் கொண்டார். நடக்கவே முடியாமல் ரன் ஓடினார். சமீபத்தில்தான் விபத்தில் சிக்கியிருந்தார். இத்தனையும் தாண்டி சாதனையை நிகழ்த்தி காட்டினார் மேக்ஸ்வெல்.

கபில் தேவ் ஆடியது முதன் இன்னிங்ஸ். ஆனால், மேக்ஸ்வெல் ஆடியது சேஸிங். அதுவும் 292 ரன்கள் என பெரிய இலக்கு. இருவருமே அசாத்தியமான சூழலில் இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றி அணியை வெற்றி பெற வைத்தனர்.
maxwell

இன்று எல்லோரும் கபில் தேவ் ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை நெகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். மேக்ஸ்வெல்லையும் வானளாவ பாராட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும், இவர்களோடு சேர்த்து நாம் நினைவு கூறத்தக்க வீரர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால், கபில் தேவ் மற்றும் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் நிச்சயம் கிடையாது. ஆம். அது குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.

அன்று கபில் தேவ் ஆட்டத்தில் நடந்தது!

உலகக்கோபையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆட்டத்தின் வெற்றி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இந்திய அணிக்கு சவாலாக இருந்தது. ஆனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், அமர்நாத் போன்ற ஜாம்பவான்கள் எல்லோரும் வந்த வேகத்தில் நடையை கட்டி பேரரதிர்ச்சி கொடுத்தனர்.

kapil dev

17 ரன்களுக்குள் 5 விக்கெட் என்பது மட்டுமல்ல, 77 மற்றும் 78 ஆவது ரன்களில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் காலி. அத்துடன் 140 ஆவது ரன்னில் 8 ஆவது விக்கெட்டும் காலி. ஆனால், அதன் பிறகு விக்கெட் விழவே இல்லை. இதில் கபில் தேவ் 16 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்றால் அதற்கு முக்கியமான காரணமாக அவருக்கு உறுதுணையாக களத்தில் இருந்த மூன்று வீரர்களின் பங்களிப்பும் காரணமாக அமைந்தது.

முதலில் ரோஜர் பின்னி..

17 ரன்களில் 5 விக்கெட் இழந்த நிலையில் கபில் தேவ் உடன் ஜோடி சேர்ந்தார் ரோஜர் பின்னி. 48 பந்துகளை சந்தித்த அவர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 77 ரன்னில்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது. உடனடியாக விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது ரோஜர்தான்.

kapil - roger binny

கபில் - ரோஜர் ஜோடி 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. அடுத்து வந்த ரவி சாஸ்திரி ஒரு ரன்னில் நடையை கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.

இரண்டாவது மதன் லால்..

kapil - madan lal

அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில் களத்திற்கு வந்தார் மதன். இவரும் தன் பங்கிற்கு கபில் தேவ்க்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். ஒருபுறம் கபில் தேவ் அதிரடி காட்ட, இவர் சிங்கிள்களாக எடுத்துக் கொடுத்தார். மதன் தன் பங்கிற்கு 39 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. இதுவும் முக்கியமான பார்னர்ஷிப்தான்.

மூன்றாவது - விக்கெட் கீப்பரான சையது கிர்மானி..

இவருடைய பங்களிப்புதான் மிகவும் அளப்பறியது. 140 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்திற்கு வந்தவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடைய ஒத்துழைப்பால்தான் கபில் தேவ் கவலையேதும் இல்லாமல் வானவேடிக்கை காட்டினார். 56 பந்துகலை சந்தித்து 24 ரன்களுடன் நாட் அவுட் ஆக ஜொலித்தார். கபில் கிர்மானி ஜோடி 126 ரன்கள் சேர்த்தது. இதுதான் போட்டியின் ஹைலைட். மூவரது பங்களிப்புடன் கபில் தேவ்

kapil - syed kirmani

ஒரே ஆளாக தூணாக நின்ற பேட் கம்மின்ஸ்

1983 உலகக்கோப்பையில் கபில் தேவ்வின் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்திற்கு ரோஜர் பின்னி, மதன் லால், சையது கிர்மானி ஆகிய மூவர் துணையாக இருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஒரே ஆளாக மேக்ஸ்வெல்லுக்கு துணை நின்றவர்.. இன்னும் சொல்லப்போனால் தூணாக நின்றவர் கேப்டன் பேட் கம்மின்ஸ். இதுவும் ஒரு வகையில் கேப்டன் நாக்-தான். 91 ரன்களில் 7 விக்கெட் இழந்த நிலையில் மேக்ஸ்வெல்லுக்கு துணையாக வந்தார் கம்மின்ஸ்.

அந்த இடத்தில் இருந்து கிட்டதட்ட 200 ரன்களுக்கு மேல், 30 ஓவர்கள் களத்தில் ஒரு சுவராக நின்று விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடினார். மேக்ஸ்வெல் கூட இரண்டு வாய்ப்புகள் எதிரணிக்கு கொடுத்தார். ஆனால், கம்மின்ஸ் ஒரு வாய்ப்பு கூட வழங்கவில்லை. நிறைய பந்துகளை அழகாக எதிர் கொண்டு தடுப்பாட்டம் ஆடினார். நிறைய நேரம் மேக்ஸ்வெல்லே பந்துகளை சந்தித்தாலும், தனக்கான நேரம் வரும் போதும் ‘விக்கெட்ட பறிகொடுத்துட கூடாதுடா கைப்புள்ள..’ என்று டிராவிட்டாகவே மாறிவிட்டார்.

maxwell - pat cummins

அதுவும், மேக்ஸ்வெல் களத்தில் வலியால் துடித்த போது, ஓட முடியாமல் தவித்த போது இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டார்கள். ஓடாமல் ஆளுக்கு ஒரு ஓவர் ஆடிக் கொள்ளலாம், மறுமுனையில் மேக்ஸ்வெல் ஓடாமல் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அதன்படி நிறைய பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார். நூர் வீசிய 43 ஆவது ஓவரை முழுவதுமாக எதிர்கொண்டு மெயிடன் ஆக்கினார்.

மேக்ஸ்வெல்லுக்கு மிகவும் அற்புதமாக ஒத்துழைப்பு அளித்தார். மறு முனையில் மேக்ஸ்வெல்லின் வானவேடிக்கையை கொண்டாடிக்கொண்டே இருந்தார்.

maxwell - pat cummins

68 பந்துகளை சந்தித்த அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். எல்லாம் சிங்கிள்தான். மேக்ஸ்வெல் 128 பந்துகளை சந்தித்து 181 நிமிடங்கள் களத்தில் இருந்தார். அதேபோல், 68 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் 122 நிமிடங்கள் களத்தில் இருந்தார்.

வெற்றிக்கு மேக்ஸ்வெல்லின் பிக் ஷோதான் காரணம். அதனை மறுக்கவே முடியாது. ஆனால், ஒருவேளை கம்மின்ஸ் ஆட்டமிழந்து இருந்தாலும் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கையைவிட்டு நழுவிப் போயிருக்கும். அடுத்து வரும் ஆடம் ஜம்பா, ஹசல்வுட் விக்கெட்டை ஆப்கன் வீரர்கள் எளிதில் வீழ்த்தி இருப்பார்கள். ஆனால், எதற்கும் கம்மின்ஸ் இடம் கொடுக்கவே இல்லை.

maxwell - pat cummins
மேக்ஸ்வெல்லின் வரலாறு சாதனை பேசப்படும் வரை பேட் கம்மின்ஸின் ஒத்துழைப்பும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.