2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறுகிறது. 38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 21-ம் தேதியான இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல்சுற்று போட்டிகள் நடந்த நிலையில், ஹைதராபாத் அணியானது நாகலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆரவெல்லி அவனிஷ், 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 82 பந்தில் சதமடித்து அசத்தினார். அவனிஷின் ஆட்டத்தால் 276 ரன்களை சேர்த்தது ஹைத்ராபாத் அணி.
பின்னர் விளையாடிய நாகலாந்து அணி 234 ரன்கள் மட்டுமே சேர்த்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
19 வயதேயான ஆரவெல்லி அவனிஷ் 2023 யு19 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்ட அவரை 2024 ஐபிஎல் தொடரில் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலத்திற்கு எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தோனி விக்கெட் கீப்பிங் செய்வதில் பிரச்னை இருப்பதால் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பரான ஆரவெல்லி அவனிஷ் களமிறக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் அவனிஷை சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றியது.
இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக விஜய் ஹசாரே தொடரில் சதமடித்து அசத்தியுள்ளார் ஆரவெல்லி அவனிஷ்.