5 ஓவரில் 100 ரன்கள் அடித்து இந்திய அணி 2 உலகசாதனைகளை படைத்தது. அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி ஜோடி பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது. 13.2 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா தொடரை 3-0 என கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவரும் நிலையில், 2 போட்டிகள் முடிவில் வெற்றிபெற்று 2-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.
199 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஜோடியாக அபிஷேக் சர்மா மற்றும் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர். எப்போதும் முதல் பந்திலிருந்தே அடிக்கும் சூர்யவன்ஷியை நிற்கவைத்துவிட்டு அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். 5 புண்டரிகள் 6 சிக்சர்கள் என சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 15 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த சூர்யவன்ஷியும் 3 சிக்சர்களை பறக்கவிட வெறும் 5 ஓவரிலேயே 100 ரன்கள் அடித்து வரலாறு படைத்தது இந்திய அணி.
அதிவேகமாக 5 ஓவர்களில் 100 ரன்கள் அடித்த அணியாகவும், பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்த அணியாகவும் 2 உலகசாதனைகளை படைத்தது இந்திய அணி. இதற்கு முன்பு 5.2 ஓவரில் செர்பியா அணிக்கு எதிராக ரொமானியா அணி அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை உடைத்துள்ளது இந்தியா.
அதுமட்டுமில்லாமல் பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலியா சாதனையையும் முறியடித்து, உலகசாதனை படைத்தது இந்தியா. ஆஸ்திரேலியா 6 ஓவரில் 113 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்தியா 6 ஓவரில் 118 ரன்கள் அடித்து மிரட்டியது.
அபிஷேக் சர்மா 35 பந்தில் சதமடித்து மிரட்டிய நிலையில், இந்திய அணி வெறும் 13.2 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது இந்திய அணி.