சிங்கப்பூரில், சமீபத்தில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி, இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ், குகேஷுக்கு எதிராகப் போட்டியிட்ட சீனாவின் டிங் லிரன் வேண்டுமென்றே தோற்றதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அவர், “ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் நடந்த சில விஷயங்கள் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது. அப்போது சீன செஸ் வீரரின் அந்த மூவ் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். டிங் லிரன் அப்போது இருந்த நிலையில் இருந்து, தோற்று இருக்கிறார் என்பதை ஏற்க முடியாது. ஆட்டத்தில் சீன செஸ் வீரரின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அவர் ஏதோ வேண்டுமென்றே தோல்வி அடைந்தது போலவே தெரிகிறது” எனப் புகாரை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக சர்வதேச செஸ் அமைப்பு (FIDE) தலைவர் Arkady Dvorkovich பதிலளித்துள்ளார். அவர், ரஷ்யாவின் ஆண்ட்ரே ஃபிலடோவின் புகாரை ஒதுக்கித் தள்ளியதுடன், “விளையாட்டு என்பது தவறுகளைச் செய்வதும், அதற்குப் பிறகு மீள்வதும்தான். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தவறு செய்கிறார்கள். ஆனால் அதேநேரத்தில், ஒரு தவறைப் பயன்படுத்துவதற்கு எதிராளி வழி கண்டுபிடிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.