உலக செஸ் சாம்பியன் குகேஷ் web
செஸ்

”11 வயதில் கனவு கண்டேன்..” உலக செஸ் சாம்பியன் குகேஷ் ஆனந்த மகிழ்ச்சியில் சொன்ன வார்த்தைகள்!

நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.

Rishan Vengai

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 12 சுற்றுகள் வரை குகேஷ் மற்றும் டிங் லிரென் இருவரும் 6-6 என சமபுள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்திற்காக போராடினர்.

அதற்குபிறகுநடைபெற்ற 13வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்த நிலையில் இருவரும் 6.5-6.5 புள்ளிகளுடன் மீண்டும் சமநிலையிலேயே இறுந்தனர்.

D Gukesh vs Ding Liren

இந்நிலையில் இன்று நடைபெற்ற 14வது மற்றும் கடைசி சுற்று போட்டியானது வெற்றியாளரை தீர்மானிக்கும் ஒரு போட்டியாக நடைபெற்றது. ஒருவேளை இந்த ஆட்டத்திலும் முடிவு எட்டப்படாவிட்டால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளருக்கான போட்டி நடைபெறும் என கூறப்பட்டது.

ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காத இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி புதிய உலக சாம்பியனாக மகுடம் சூடிக்கொண்டார்.

போட்டியில் நடந்தது என்ன?

விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்று போட்டியில், இருவருமே இறுதிவரை அழுத்தத்தின் போது கூட விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். ஆனால் இரண்டாம் பாதியில் அழுத்தத்தை சீனா சாம்பியன் பக்கம் திருப்பிய குகேஷ், இருவரும் குயின்களை இழந்தபோதும் சிப்பாய்களை கூடுதலாக பெற்றிருந்த குகேஷ் முன்னிலை பெற்றார்.

இருப்பினும் கடைசி 15 நிமிடம் வரை போட்டி டிராவை நோக்கியே சென்றுகொண்டிருந்த நிலையில், கூடுதலாக காய்களை இழந்த டிங் லிரென் அதிகமான அழுத்தம் காரணமாக ரூக் F2 வை நகர்த்தி தவறு செய்ததால், குகேஷ் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது. 

முடிவில் 18 வயதில் உலக செஸ் சாம்பியனாக மகுடம் சூடிய குகேஷ், இளம் வயதில் உலக செஸ் சாம்பியனான முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் தனதாக்கி கொண்டார்.

11 வயதில் கனவு கண்டேன்..

உலக செஸ் சாம்பியன் படத்தை வென்றபிறகு பேசிய இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், லீரென் தோல்வியடைந்ததற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற ஒரு தருணத்தை ஒவ்வொரு செஸ் வீரரும் அனுபவிக்க வேண்டும். சாம்பியனான மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது உள்ள சந்தோஷத்தில் பேசினால் எதாவது முட்டாள்தனமாக பேசிவிடுவேன்.

ஆட்டம் டிராவில் முடிவடையும் என்றே நினைத்தேன். 11 வயதில்,செஸ் வரலாற்றில் இளம் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். தற்போது அது நிறைவேறி உள்ளதாக மகிழ்ச்சியான கண்களுடன் பேசினார் குகேஷ்.