இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 12 சுற்றுகள் முடிந்துள்ளன.
12 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் மற்றும் லிரென் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை பெற்றனர். இந்த சூழலில் இன்று நடைபெற்ற 13வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் இருவரும் தலா 6.5 புள்ளிகளை எட்டி சமனில் தொடர்கின்றனர்.
இருவருக்கும் இடையேயான கடைசி சுற்று நாளை நடைபெறவிருக்கும் நிலையில், முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். ஒருவேளை கடைசிசுற்றும் டிராவில் முடிந்தால் டை பிரேக்கர் போட்டிகள் நடத்தப்படும்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தானின் நட்சத்திர பவுலர் ஷாஹீன் அப்ரிடி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்றுவிதமான சர்வதேச போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் பாகிஸ்தான் பந்துவீச்சாளராக வரலாற்று சாதனை படைத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கான ITF டென்னிஸ் தொடர் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா யமலாபள்ளி, சக வீராங்கனையான ஈஸ்வரி மேடரேவை 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-0, 6-1 என சக வீராங்கனை மாதுரிமாவை வீழ்த்தினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகான்ஷா-சோகா ஜோடி, சுலோவேனியாவின் விக்டோரியா-லாட்வியாவின் டயானா ஜோடியை 6-0, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
சையத் முஷ்டாக் அலி தொடரானது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளன. இன்று மத்திய பிரதேசம், சௌராஷ்டிரா, பெங்கால், பரோடா, மும்பை, விதர்பா, டெல்லி, உத்தரபிரதேசம் முதலிய 8 அணிகளுக்கு இடையே காலிறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில், பரோடா, மும்பை, டெல்லி மற்றும் மத்திய பிரதேச அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. டிசம்பர் 13ம் தேதி அரையிறுதி போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
ஆசியக் கோப்பை கால்பந்து தொடரானது 2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான இரண்டு கட்ட தகுதிச்சுற்று போட்டிகளில் இதுவரை 18 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் 2025 மார்ச் மாதம் துவங்குகின்றன. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் நிலையில், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோதும்வகையில் போட்டி நடத்தப்படவிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணிகள், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும்.
இந்த பட்டியலில் இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
உலக கால்பந்து கூட்டமைப்பான FIFA, 2034 ஆண்கள் கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் நாடாக சவுதி அரேபியாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல 2030 உலகக்கோப்பை பதிப்பானது 3 கண்டங்களில் 6 நாடுகளாக ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ, பராகுவே, அர்ஜென்டினா மற்றும் உருகுவே என மொத்தம் ஆறு நாடுகள் சேர்ந்து நடத்தும் என கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 9வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார்.
ஏற்கனவே இந்தியாவிற்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்திருந்த மிதாலி ராஜ் (7 சதங்கள்) சாதனையை முறியடித்திருந்த ஸ்மிரிதி தொடர்ந்து அதன் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்.
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 தொடரின் இரண்டாவது பதிப்பானது 2025 ஜனவரி 26 முதல் பிப்ரவரி 9 வரை மும்பையில் நடைபெறவிருக்கிறது. இது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் லீக் ஆகும்.
இந்த தொடரில் பெங்களூர் ஸ்ட்ரைக்கர்ஸ், சென்னை சிங்கம்ஸ், பால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத், மஜி மும்பை, ஸ்ரீநகர் கீ வீர் மற்றும் கொல்கத்தா டைகர்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றநிலையில் 55 நகரங்களில் இருந்து மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக அபிஷேக் குமார் தல்ஹோரை ரூ.20.50 லட்சத்திற்கு மஜி மும்பை அணி வாங்கியது. கொல்கத்தாவின் டைகர்ஸ் அணி முதல் பதிப்பின் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற விதர்பா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி காலிறுதிப்போட்டியில் 222 ரன்களை சேஸ்செய்த மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒரு டி20 லீக்கின் நாக் அவுட் போட்டியில் அதிகப்படியான இலக்கை சேஸ் செய்த அணியாக மும்பை அணி உலகசாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் பிரித்விஷா 49 ரன்களும், ரஹானே 84 ரன்களும் விளாசியிருந்தனர்.
இதற்கு முன்னதாக 2010-ல் நடைபெற்ற பைசல் பேங்க் டி20 கோப்பையின் (Faysal Bank T20 Cup 2010) நாக் அவுட் போட்டியில் கராச்சி அணி ராவல்பிண்டி அணிக்கெதிராக 210 ரன்களை சேஸ் செய்திருந்ததே சாதனையாக இருந்தது.