Vaishali
Vaishali pt desk
செஸ்

செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி! இது ஸ்பெஷலான சாதனை!

webteam

இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும், தமிழகத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள முதல் வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். ஏற்கனவே கொனெரு ஹம்பி, ஹரிகா ஆகிய இரண்டு வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த பட்டத்தை வைஷாலி தன் வசமாக்கி உள்ளார்.

Vaishali with her mom and brother

ஏற்கனவே செஸ் கிராண்ட்மாஸ்டர் பெறுவதற்கான மூன்று NORM-களை அவர் பெற்றிருந்த நிலையில், கிளாசிக் செஸ் போட்டி பிரிவில் இரண்டாயிரத்து 500 ELO புள்ளிகளை கடந்து வைஷாலி தற்போது கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார். சர்வதேச செஸ் அரங்கை பொறுத்தவரை ஆண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதை விட, பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதுதான் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பெண்களில் இதுவரை 41 பேர் மட்டுமே, செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ள வைஷாலி, பிரபல இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

வரலாற்றில் முதல் முறையாக சகோதரன் - சகோதரி இருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வைஷாலிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”உங்களுடைய சாதனைகளை கண்டு பெரும்கொள்கிறோம். அத்துடன் உங்களது இந்த சாதனை பயணம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, நம்முடைய மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று முதல்வர் தன்னுடைய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.