உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
37 வயதான கோனேரு ஹம்பி பரபரப்பான இறுதிப்போட்டியில் 11 சுற்றுகளில் 8.5 புள்ளிகளை பெற்றதன் மூலம், இந்தோனேசியாவின் ஐரீன் சுகந்தரை தோற்கடித்தார். உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பட்டம் வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கோனேரு, 2024 பட்டத்தையும் வென்று ஒன்றுக்கு மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை வெற்றவர்கள் பட்டியலில் சீனாவின் ஜூ வென்ஜுன் சாதனையை சமன்செய்துள்ளார். அவர் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வென்றிருந்தார்.
வெற்றிபெற்றது குறித்து பேசிய கோனேரு ஹம்பி, “நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உண்மையில், இறுதிப்போட்டி டை-பிரேக்கரை நோக்கி செல்லும், கடினமான ஒருநாளாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் நான் ஆட்டத்தை முடித்ததும், நடுவர் என்னிடம் வெற்றி பற்றிதாக கூறினார். மிகவும் பதட்டமான தருணமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
இரண்டு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் கோனேரு ஹம்பியை வாழ்த்தியிருக்கும் பிரதமர் நேரந்திர மோடி, எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “2024 FIDE மகளிர் உலக ரேபிட் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பிக்கு வாழ்த்துக்கள். அவருடைய துணிவும் புத்திசாலித்தனமும் மில்லியன் கணக்கானவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இந்த வெற்றி இன்னும் வரலாற்று சிறப்புமிக்கது, ஏனெனில் இது அவரது இரண்டாவது உலக ரேபிட் சாம்பியன்ஷிப் பட்டமாகும், இதன் மூலம் நம்பமுடியாத சாதனையை எட்டிய ஒரே இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்” என்று வாழ்த்தியுள்ளார்.