செஸ் வீரர் குகேஷ்
செஸ் வீரர் குகேஷ் புதியதலைமுறை
செஸ்

கருப்பு - வெள்ளை உலகில் ஆதிக்கம்.. தமிழ்நாட்டு செஸ் வீரர் குகேஷ் கடந்து வந்த பாதை!

PT WEB

செஸ் விளையாட்டு மீதான ஆர்வத்தை தூண்டி இளம் வீரர்களை கவர்வதில் தமிழ்நாடு கிராண்ட்மாஸ்டர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்யானந்தா வரிசையில் சர்வதேச அளவில் சாதனை புரிந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளார் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ்..

உள்ளே ஆக்ரோஷம், வெளியே அமைதி என இரண்டையும் ஒருங்கிணைத்து கருப்பு - வெள்ளை கட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் குகேஷ்.

17 வயதில் இதுவரை யாருமே வெற்றி பெற முடியாமல் இருந்த செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் வரலாறு படைத்துள்ளார்.

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்தை தவிர இந்தியாவில் வேறு யாரும் இதுவரை வெற்றி பெறாத சூழலில், கனடாவில் தான் பங்கேற்ற முதல் கேண்டிடேட்ஸ் தொடரிலேயே வெற்றியை வசமாக்கியுள்ளார் குகேஷ்.

அந்த வெற்றி அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. கடந்த 30 மாதங்களில் 400 செஸ் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

செஸ் candidate தொடரில் 6 சுற்றுகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த குகேஷ், 7ஆவது சுற்றில் பிரான்ஸ் நாட்டின் Alireza Firouzja-விடம் தோல்வியை சந்தித்தார். அதனால் துவண்டுவிடாமல் இருந்த குகேஷ், அந்த தோல்வியே சாம்பியன் பட்டத்தை வெல்ல தூண்டுதலாக இருந்ததாக கூறினார்.

இறுதி சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீரரான ஹிக்காரு நகமுரா உடனான ஆட்டத்தை டிரா செய்ததன் மூலம் 9 புள்ளிகளுடன் குகேஷ் முதலிடம் பிடித்திருந்தார். வெற்றிக்கு மிக அருகில் இருந்தபோதும் அதை பற்றி பெரிய பூரிப்பு இல்லாமல் மிக அமைதியாக அவர் கையாண்ட விதத்தை முன்னாள் உலக சாம்பியன்கள் விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன், ஜூடித் பொல்கர் என அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

விஸ்வநாதன் ஆனந்த், செஸ் கிராண்ட்மாஸ்டர்

”வயதில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று குகேஷ் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். போட்டியில் அவரது முதிர்ச்சியும் வெளிப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றுள்ளார். நெருக்கடியான சூழ்நிலையை அவர் சமாளித்து விளையாடியது சிறப்பாக இருந்தது. கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் வெற்றி பெற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.”

முதலிடம் பிடித்திருந்த போதிலும், தொடரில் வெற்றி பெற ரஷ்யாவின் IAN NEPOMNIACHTCHI - அமெரிக்காவின் FABIANO CARUANA ஆகியோர் மோதிய ஆட்டத்தின் முடிவை அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

ஆனால், அதற்காக குகேஷ் காத்திருக்கவில்லை. அந்த போட்டியில் யாரெனும் வெற்றி பெற்றால் அடுத்து டை-பிரேக்கர் சுற்று இருக்குமே என்பதால், விடுதிக்கு சென்று தமது வழக்கமான நடைமுறைகளை தொடர்ந்தார்.

அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷ்ய - அமெரிக்க வீரர்கள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததும், கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தகவலையும் அவரது தந்தை குகேஷ்-க்கு தெரிவித்தார். அதன் பிறகே அவர் போட்டி அரங்கத்திற்கு சென்று கோப்பையை கைகளில் ஏந்தியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 17 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ள குகேஷ், நடப்பு உலக சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரேனை ஆண்டு இறுதியில் எதிர்கொள்கிறார்.

உலக சாம்பியன் பட்டத்தை எட்டிப்பிடிக்க காய் நகர்த்தி வரும் குகேஷ்-க்கு புதிய தலைமுறையின் வாழ்த்துகள்..