2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது.
இதற்கு பாகிஸ்தான், “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்யும். இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என எச்சரித்திருந்தது. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பிசிபியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கேட்டுக் கொண்டுள்ளது. பிசிபி இந்த நிபந்தைனைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், போட்டி முழுவதுமாக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் இந்தியா, பாகிஸ்தான் வர மறுப்பதற்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தான் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. இன்று நடைபெறும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், ஓர் உறுதியான முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இன்றைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் மூன்றுவிதமான முடிவுகள் எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவுக்கு ஆதரவாக முடிவு எடுத்து இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வெளிநாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை வலியுறுத்தும். ஒருவேளை, இந்தியா ஆடாவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கருத்தில்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொள்ளும். இரண்டாவதாக, இந்தியாவுக்காக மட்டும் வேறு நாட்டில் தொடரை நடத்த முடியாது என பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகும் முடிவை எடுக்கலாம். அப்படி நடந்தால் பாகிஸ்தான் அணியைச் சேர்த்தோ அல்லது பாகிஸ்தான் அணியை விடுவித்து விட்டோ வேறு நாட்டில் சாம்பியன்ஸ் திருப்பி தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தலாம். ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அல்லது தென்னாப்பிரிக்காவில் இந்த தொடரை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. மூன்றாவதாக, இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை காலவரையின்றி தள்ளி வைக்கப்படலாம். ஆனால், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். பெரும்பான்மையாக இந்த மூன்று முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், இவையே உறுதியல்ல.