indian team, bcci x page
விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி 2025 | வீரர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி.. ஆனால் நிபந்தனை இதுதான்!

துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய அணி அங்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், புதிய விதிகளின்படி, வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக, மூத்த வீரர்கள் சிலர் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்லக் கேட்டு அனுமதி கேட்டுள்ளனர். இதை தற்போது பிசிசிஐ பரிசீலித்துள்ளது.

india team

அதன்படி, துபாயில் நடைபெறும் போட்டிகளில் நிபந்தனைகளுடன் ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போன்ற குறுகிய காலப் போட்டிகளுக்கு, குடும்ப உறுப்பினர்களின் துணை முதலில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், நிகழ்வின் தன்மையைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு வீரரும் ஒரு ஆட்டத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் துணையுடன் இருக்க வாரியம் அனுமதித்துள்ளது. இது, எந்தப் போட்டிக்கு என்பதை வீரர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே, அதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 45 நாட்களுக்குமேல் உள்ள வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் குடும்பங்கள் தங்குவதற்கு இரண்டு வாரகால அவகாசத்தை மட்டுமே வாரியம் அங்கீகரித்துள்ளது. தவிர, தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் இதர சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது. ஒருவேளை, இதில் ஏதேனும் விதிவிலக்குகள் அல்லது விலகல்கள் இருப்பின் தேர்வுக் குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளரால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும். இணங்கத் தவறினால் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ

பிப்ரவரி 20ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்ள இருக்கிறது.