ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளம்
விளையாட்டு

பிசிசிஐ விருதுகள் | 24 வருட கிரிக்கெட் வாழ்க்கை.. சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, பிசிசிஐயின் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Prakash J

உலக வீரர்களுக்கு ஐசிசி ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிப்பதைப் போன்று, 2023-24ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த செயல்திறன் கொண்ட சில ஜாம்பவான்களுக்கும் பிசிசிஐ மதிப்புமிக்க விருதுகளை இன்று வழங்கி கெளரவித்தது. மும்பையில் நடைபெற்ற இந்த விழாவில், ஐசிசி சேர்மேன் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 24 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக சச்சின் செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அடுத்து, சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சர்வதேச வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என இரண்டு விருதுகள் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டன. சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐயின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது சர்ஃபராஸ் கானுக்கும் பெண்கள் பிரிவில், ஆஷா சோபனாவுக்கும் வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனையாக தீப்தி சர்மாவுக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த நடுவராக அக்ஷய் டோட்ரேவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போட்டிகளில் சிறந்த செயல்திறன் கொண்ட மைதானமாக மும்பை வான்கடே விருதை வென்றுள்ளது.

விருது பெற்றவர்கள்

இவ்விழாவில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றதற்கு உண்மையிலேயே நன்றி தெரிவிக்கிறேன்” என்றவர், ”நீங்கள் அனைவரும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்கள். உங்களிடம் நல்ல திறமையான கிரிக்கெட் உள்ளது. ஆகையால், நீங்கள் சிறந்ததைக் கொடுத்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு பின்பு நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியவுடன் மட்டுமே இதை உணரமுடியும். நம்மிடம் எல்லாம் இருக்கும்போது விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் நாட்டின் பெயருக்கும் ஏற்ற வகையில் நடந்துகொள்வதும் முக்கியம். விளையாட்டில் கவனச் சிதறல்கள் இருக்கக்கூடும். அதனால் பாதிப்படைந்துவிடாதீர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.