கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்போது கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது.
பந்தின் ஒரு பக்கத்தை சொரசொரப்பாக்கி ரிவர்ஸ் ஸ்விங்வரவழைக்க திட்டமிட்டு இளம் ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் பேன்கிராப்ட் (Cameron Bancroft), மஞ்சள் நிற உப்புத்தாளை (Sandpaper) பயன்படுத்தி பந்தை தேய்த்தார். இது கேமராவில் சிக்கிய நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறை படி இது கடுமையான குற்றம் என்பதால் இதில் ஈடுபட்ட இளம் வீரர் பேன்கிராப்ட்க்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது. கேப்டன் ஸ்மித்க்கு 12 மாதங்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் கேப்டன் பதவி வகிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
அதேபோல, துணை கேப்டன் டேவிட் வார்னருக்கும் 12 மாதங்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை வகிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அப்போது அணியில் இடம்பெற்றிருந்த மூத்த வீரர் உஸ்மான் கவாஜா (khawaja ) தனது 'சப்ர்' (Sabr) என்ற சுயசரிதை நூலில் இந்த சம்பவத்தில் முழு ஆஸ்திரேலியா அணியும் ஈடுபட்டது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
சான்ட்பேப்பர் மூலம் பந்து சேதப்படுத்தும் சதித்திட்டம் ஆஸ்திரேலிய அணியில் இருந்த வீரர்கள் அனைவருக்கும் தெரிந்தே நடந்தது என்றும், அது நாங்கள் அனைவரும் இணைந்து செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதே பேன்கிராப்ட் சான்ட்பேப்பரைப் பயன்படுத்தினார் என்றும், மூன்றாவது டெஸ்டில் அவர் கேமராவில் பிடிபட்டார் என்றும் கவாஜா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்திற்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராப்ட் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே பலியாடாக மாற்றப்பட்டுத் தண்டனை பெற்றனர் என்றும், அணி நிர்வாகமும் மற்ற வீரர்களும் இதற்கான கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அப்போது அணியில் இருந்த மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh), பாட் கம்மின்ஸ் (Pat Cummins), மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc), நாதன் லயன் (Nathan Lyon), ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.