முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர்களான கௌரவ் நடேகர் மற்றும் ஆரத்தி பொன்னப்பா நடேகர் இணைந்து World Pickleball League என்பதை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் பிரபலமடைந்துவரும் பிக்கில் பால் போட்டிகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக இந்த தொடர் நடப்பாண்டு 2025-ல் முதல்முறையாக நடத்தப்படவிருக்கிறது.
சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை சேர்ந்த 6 அணிகள் விளையாடவிருக்கும் இந்த தொடரானது, ஜனவரி 24-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.
6 அணிகளில் சென்னை பிக்கில் பால் அணியை நடிகை சமந்தாவும், மும்பை பிக்கில் பால் அணியை ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனமும் விலைக்கு வாங்கிய நிலையில், தற்போது பெங்களூர் அணியை இயக்குநர் அட்லீ மற்றும் அவருடைய மனைவி பிரியா அட்லீ இருவரும் இணைந்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
பிக்கில் பால் என்பது டென்னிஸ், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் கலவையாகும். ஆனால் இவற்றின் விதி இந்த விளையாட்டுகளில் இருந்து மிகவும் மாறுபட்டது. அத்துடன் இந்த பந்தின் எடையும் குறைவு. இவ்விளையாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள்.
இந்த விளையாட்டிலும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் முறை உள்ளது. இது, டென்னிஸ் மைதானத்தின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் விளையாடப்படுகிறது. இதன் வலையும் டென்னிஸ் வலையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கு, 2005-ல் அசோசியேஷன் உருவாக்கப்பட்டது. இவ்விளையாட்டு, இந்தியாவில் 2006-ல் கொண்டுவரப்பட்டது. சுனில் வால்வல்கர் என்பவர் அதை இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளார். தற்போது இவ்விளையாட்டு, இந்தியாவின் 16 மாநிலங்களில் விளையாடப்படுகிறது.
கடந்த 1965ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜோல் பிரிட்சர்ட் என்ற எம்பி, தனது நண்பர்கள் பில் பெல் மற்றும் பார்னி மெக்கல்லம் ஆகியோருடன் சேர்ந்து, தங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பிக்கில்பால் விளையாட்டை கண்டுபிடித்துள்ளார்.
அப்படி கோடைக்கால விடுமுறையின்போது, கொல்லைப்புற பொழுதுபோக்கு விளையாட்டாக தொடங்கிய பிக்கில்பால், தற்போது உலக அளவில் அதிகமானோரால் விளையாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உருவான இந்த விளையாட்டு, இந்தியா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது.
உலகளவில் பிரபலமடைந்துவரும் இந்த விளையாட்டானது இந்தியாவிலும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளது. 2028-ம் ஆண்டில் இந்தியாவில் இந்த விளையாட்டில் பதிவு செய்யப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வீரர்கள் இந்த விளையாட்டில் பதிவு செய்யப்பட்ட வீரர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சாருக்கானை வைத்து ஜவான் என்ற 1000 கோடி பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குநர் அட்லியும், அவரது மனைவியும் இணைந்து உலக பிக்கில் பால் லீக்கில் பெங்களூரு அணியை விலைக்கு வாங்கியுள்ளனர். அந்த அணிக்கு ’பெங்களூரு ஜவான்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அட்லி பெங்களூரு நகரத்துடன் தங்களுக்கு ஒரு தனிப்பட்ட பிணைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். பெங்களூரு ஜவான் பிக்கில்பால் அணி குறித்து அட்லீ குழு சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் பதிவில், தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
World Pickleball League-ன் முதல் சீசனை மும்பையின் ஐகானிக் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) நடத்துகிறது.