டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கியிருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி மத ரீதியாகவும் ஷமி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், இந்திய அணியின் சார்பாக விளையாடும் அனைத்து வீரர்களையும் ஆதரிக்க வேண்டும் எனவும், தான் ஷமிக்கு ஆதரவாக நிற்கிறேன் என்றும் கூறியுள்ளார். முகமது ஷமி மீதான ஆன்லைன் தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதேபோல் இர்பான் பதான், ஆகாஷ் சோப்ரா, கவுதம் கம்பீர், ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட வீரர்கள் முகமது ஷமிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், யாரும் எந்த அன்பையும் பொழியாததால் அவர்கள் வெறுப்பால் நிறைந்துள்ளார்கள் என்றும் அவர்களை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
விளையாடிய 11 வீரர்களில் முகமது ஷமி கடுமையாக ட்ரோல் செய்யப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய அணி துணை நிற்காதது ஏன் என காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்கள் ஏராளமானோரும் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.