விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள புறப்பட்டுச்சென்றார்.
சமீபத்தில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தன்னுடைய அணியுடன் சேர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கார் பந்தயங்களில் அடுத்த 9 மாதங்களுக்கு பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. அதில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமார் ரேஸிங் அணி, 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வெற்றியை அணியுடன் சேர்ந்து அஜித்குமார் துள்ளிக்குதித்து கொண்டாடினார்.
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, போர்ஷே 992 கப் கார் (எண் 901) ரேஸ், போர்ஷே கேமன் GT4 (எண் 414) ரேஸ் என இரண்டு பிரிவுகளில் பங்கேற்றது. இதில் GT4 ரேஸில் மட்டும் அஜித் ஓட்டுநராக பங்கேற்றார்.
முதல்முறையாக ஒரு சர்வதேச ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் அணி, முதல் பங்கேற்பிலேயே போர்ஷே 992 கப் கார் ரேஸ் பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இந்த வெற்றி அணிக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமார் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி வெற்றியில் பங்கேற்றார்.
இந்நிலையில் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் ரேஸிங் அணிக்கு பாராட்டு அளிக்கப்பட்டது. அப்போது அணியின் உரிமையாளராக பேசிய அஜித்குமார் தன்னுடைய மனைவி ஷாலினியை பார்த்து “ஷாலினி, என்னை கார் பந்தயத்தில் அனுமதித்ததற்கு நன்றி” என்று கூறிவிட்டு முத்தத்தை பறக்கவிட்டார். அதைப்பார்த்த ஷாலினி மகிழ்ச்சியில் பூரித்து போனார். இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.