கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜென்டினா - எகிப்து அணிகளுக்கு இடையேயான 16 அணிகள் சுற்று போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா இறுதி 15 நிமிடங்களில் மிரட்டல் கம்பேக் கொடுத்து அபார வெற்றிபெற்றது. எனினும் இந்த போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர் செயல்பட்டார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக இந்த போட்டியில் எகிப்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் எகிப்து வீரர் முஸ்தபா ஜிகோ (Mostafa Ziko) ஒரு அபார கோல் அடித்தார். ஆனால் இந்த கோல் VAR மூலம் சரிபார்க்கப்பட்ட நிலையில், இந்த கோல் அடிப்பதற்கு 30 வினாடிகளுக்கு முன்னர் எகிப்து வீரர் மர்வான் அத்தியா, அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸை ஃபவுல் (Foul) செய்ததாகக் கூறி கோல் மறுக்கப்பட்டது.
அதே போல ஆட்டத்தின் 91-வது நிமிடத்தில் எகிப்து நட்சத்திரம் முகமது சாலா பந்தோடு அர்ஜெண்டினாவின் பெனால்டி பாக்ஸிற்குள் கோல் அடிக்க வந்தார். அப்போது அர்ஜெண்டினாவின் டிஃபெண்டர் ஜூலியன் ஆல்வரெஸ் பந்தைப் பறிக்க ஒரு டேக்கிள் (Tackle) செய்து அவரிடமிருந்து பந்தை பறித்தார். இந்த தடுப்பாட்டத்தின்போது, சாலா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தின்போது எகிப்து வீரர்கள் உடனடியாக பெனால்டி கேட்டு நடுவரைச் சூழ்ந்தனர். ஆனால் மைதான நடுவர் லெடெக்சியர், பெனால்டியை உடனடியாக நிராகரித்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோர் இது பற்றி இரண்டு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த விவாதம் சூடு பிடித்துள்ளது.
பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் ஃபிபாவின் விதிமுறை என்ன கூறுகிறது என்றே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஃபிபா விதி (Law 5: The Referee) (Section): 5.4 – (5.4 Video assistant referee - VAR) என்ற விதிப்படி,
"ஒரு அணி எதிரணியிடமிருந்து பந்தைத் தன்வசப்படுத்தி (Possession) கோல் அடிக்கும் வரையிலான ஒட்டுமொத்த நகர்வும் 'தாக்குதல் கட்டம்' (Attacking Phase) என அழைக்கப்படும்.
அந்த நகர்வின் தொடக்கத்திலோ அல்லது கோல் அடிப்பதற்கு இடைப்பட்ட நேரத்திலோ, கோல் அடித்த அணியைச் சேர்ந்த எந்தவொரு வீரராவது ஃபவுல் செய்திருந்து, அதை மைதான நடுவர் கவனிக்கத் தவறியிருந்தால், VAR தலையிட்டு அந்தப் பழைய ஃபவுலைக் காட்டி கோலை ரத்து செய்ய வேண்டும்" என்பது அதிகாரப்பூர்வ விதியாகும்.
இந்த விதியின்படி எகிப்து அடித்த கோலை ரத்து செய்த நடுவரின் முடிவு மிக சரியானதாகும். எகிப்து அணி அந்த பந்தை தன் வசத்தில் வைத்திருந்து சில நிமிடங்களுக்கு பிறகு கோல் அடித்திருந்தால் கூட, முதலில் எகிப்து வீரர் செய்த ஃபவுலை காரணம் காட்டி அந்த கோல் மறுக்கப்படலாம்.
கடந்த ஆண்டு உலககோப்பை தகுதி சுற்று போட்டியில் பராகுவே அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி கோல் அடித்த நிலையில், அந்த கோல் அடிப்பதற்கு முன்னர் அர்ஜென்டினா தடுப்பாட்டக்காரர் செய்த ஃபவுலை காரணம் காட்டி VAR தலையீடு காரணமாக அந்த கோல் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இரண்டாவது நிகழ்வில் முகமது சாலா விவகாரத்தில் ஏன் ஃபவுல் கொடுக்கப்படவில்லை என்பது குறித்து ஃபிபா விதிகள் என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம்.
FIFA Law 12 – Fouls and Misconduct என்ற பகுதியில் இதற்கான விதி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒரு தடுப்பாட்டக்காரர் முதலில் பந்தைத் தெளிவாகத் தொட்டுவிட்ட பின், ஆட்டத்தின் வேகத்தால் (Momentum) அவரது உடலோ அல்லது காலோ எதிரணி வீரர் மீது பட்டு அவர் கீழே விழுந்தால், அது விதிகளின்படி 'ஃபவுல்' ஆகாது. அது ஒரு நியாயமான டேக்கிள் (Fair Tackle ) என்றே கருதப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஸ், எகிப்து வீரர் முகமது சாலாவின் காலை தொடும் முன்னரே பந்தை தொட்டுவிட்டார். அதன் பின்னர் இருவரின் கால் மோதல் கூட ஆட்டத்தின் வேகத்தில் நடந்தது என்பதை வீடியோ காட்சிகளும் உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாகவே VAR நடுவரும் இதில் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நிகழ்வில் நடுவர் செய்தது ஃபிபா விதிப்படி சரியானது என்றாலும், இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு சலுகை காட்டப்படுவது அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ரொனால்டோ பெற்ற சிவப்பு அட்டை சாதாரணமான ஃபவுலுக்காக அல்லாமல், மைதானத்தில் எதிரணி வீரருடன் ஏற்பட்ட வன்முறைத் தன்மைக்காக வழங்கப்பட்டதால் ரொனால்டோவுக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
3 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் ரொனால்டோவால் உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ரொனால்டோ உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்று உலகக் கோப்பைக்கு முன்பு போர்ச்சுகல் அணி விளையாடிய நட்புரீதியான போட்டியில் அவருக்கு ஒரு போட்டி தடையும், மீதமுள்ள 2 போட்டிகள் தடை ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது (Probationary Period). இது ரொனால்டோ விதி என உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணி அல்ஜீரியா அணியை சந்தித்தது. இந்த போட்டியில் மெஸ்ஸி எதிரணி வீரரின் காலை மிதித்தது வீடியோவில் தெளிவாக பதிவானது. இந்த ஃபவுலுக்காக மெஸ்ஸிக்கு மஞ்சள் நிற அட்டை கூட வழங்கப்படாததும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இப்படி நட்சத்திர வீரர்களுக்கு சாதகமாக ஃபிபா செயல்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இப்படி நட்சத்திர வீரர்களுக்கு சலுகை உலகக்கோப்பையில் மட்டும் இல்லாமல் பிரிமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட முக்கிய லீக்குகளிலும் தொடர்வதாக ரசிகர்கள் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வளவு ஏன் இப்போது எகிப்து அணிக்காக ஆடி வரும் நட்சத்திர வீரர் முகமது சாலா லிவர்பூல் கிளப் அணிக்காக ஆடும்போது அவருக்கு சாதகமாகவும் பல முறை நடுவர் செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.