சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி வருடாவருடம் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 27-ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளில் மக்கள் வீடுகளிலும் பொது இடங்களி்லும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள்..
அப்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களை பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவரவர்களின் உரிமை. அதே நேரத்தில் இந்த விழா பொறுப்பான முறையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.
அதில் வழிபாடு செய்யும் போது எப்படி செய்ய வேண்டும்? எப்போது விநாயகரை கரைக்க வேண்டும்? விநாயகர் சிலை எத்தனை அடியில் இருக்க வேண்டும் என பலவிதமான விதிமுறைகளை அறிவித்துள்ளது.. அது பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. சிலை கரைக்கும் போது மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை விழா ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பெற்று இருக்க வேண்டும் என்றும் நீதிபதி அதில் குறிப்பிட்டார். அத்துடன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அவைகளாவன,
1. விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்..
2. தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
3. நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேல் வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
4. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5. மேலும், விதிகளை பின்பற்றி, போலீசார் அனுமதிக்கும் நாட்களில், விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீரில் கரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
6. விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள் , ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7. சிலை கரைக்கும் போது மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
8. தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை விழா ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பெற்று இருக்க வேண்டும்.