உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அப்படி ஒரு சிலர் வேற்று மதங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களின் பெயர்களும் இந்து மதத்தவர் போலவே இருக்கும். ஆனால் அவர்கள் வேற்று மதத்தை குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. இந்த நிலையில், தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக, திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி நிர்வாக அதிகாரியான ஒருவர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணியிடை நீக்கம் செய்தது. இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை அவர் மீறியதாக இந்த நடவடிக்கை கடந்த வாரம் எடுக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் இந்துக்களுக்கு வேலை கொடுப்பார்களா? என கேள்வியை கேட்டார்.. அதன் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டும் ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிய அவர், மாற்று மதத்தினரை சீக்கிரமாக வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்துக்கள் அல்லாத 1,000 பேர் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்த்துக் கொண்டுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்படி வேற்று மதத்தினர் வேலை செய்ய அனுமதி அளித்தது புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்தார்.. இவர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை இல்லாமலும், இந்து தர்மத்தை கடைப்பிடிக்காமலும் பணிபுரிகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசியவர், தேவாலயம், மசூதிகளில் இந்துக்கள் பணியாற்ற முடியாதது.. அதுபோல் திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தினரை அனுமதிக்க முடியாது. இது எப்படி சாத்தியமாயிற்று? எனவும் இது குறித்து தகுந்த விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், திருப்பதி கோயிலின் புனிதத்தையும் ஆன்மீக தூய்மையையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் இந்து அல்லாத ஊழியர்கள் அனைவரையும் உடனடியாகக் கண்டறிந்து நீக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்..
இந்துக்கள் அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்துவது கோயிலின் ஆன்மீக நெறிமுறைகளை மீறுவது மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலுமிருந்து திருமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான இந்து பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் 2007 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தேவஸ்தானத்தின் விதியின்படி, இந்துக்கள் அல்லாதவர்களை பணியமர்த்துவதைத் தடை செய்கின்றன, இருப்பினும் இந்தத் திருத்தத்திற்கு முன்பு பணியமர்த்தப்பட்ட சில ஊழியர்கள் தங்கள் சேவையைத் தொடர்ந்துள்ளனர். இதனால் உடனடியாக அவர்களை கண்டறிந்து நீக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. .