உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அப்படி ஒரு சிலர் வேற்று மதங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களின் பெயர்களும் இந்து மதத்தவர் போலவே இருக்கும். ஆனால் அவர்கள் வேற்று மதத்தை குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுபவர்கள் இந்துக்களாகதான் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
இந்த நிபந்தனைக்கு மாறாக துணைச் செயல் பொறியாளர் (தரக் கட்டுப்பாடு) பி. எலிசர், மருத்துவமனை செவிலியர், எஸ். ரோஸி, BIRRD மருத்துவமனை மருந்தாளர், எம். பிரேமாவதி, எஸ்.வி. ஆயுர்வேத பார்மசி டாக்டர் அசுந்தா ஆகிய நான்கு பேரும் தாங்கள் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தாங்கள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்துள்ளனர்.. அப்படி சேரும் போது போலியான சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், இந்த 4 ஊழியர்களும் திருப்பதி கோயிலின் நடத்தை விதிகளை மீறி, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் திருப்பதியில் பணிபுரியும் நபர்கள் நடத்தை மற்றும் நடைமுறை இரண்டிலும் இந்து நம்பிக்கையின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இவர்கள் நான்கு பேரும் அதை மீறியுள்ளனர்” என்று தெரிவித்தது.
மேலும் " திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கையை ஆராய்ந்த பிறகு, விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நான்கு ஊழியர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்" என்று திருப்பதி கோயிலின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக தேவஸ்தான வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் கூறுகையில், இந்த 4 ஊழியர்களுக்கும் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லை என்று குற்றம் சாட்டினார். அவர்கள் மற்ற மதங்களில் நம்பிக்கையைப் பேணுகையில் தெய்வத்தின் வளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார். கடைசி இந்து அல்லாத ஊழியரையும் நீக்கும் வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்து அல்லாத ஊழியர்களை வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றுவது அல்லது அவர்களுக்கு தன்னார்வ ஓய்வு (விஆர்எஸ்) வழங்குவது என வாரியம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்..
இதே போல தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக, திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி நிர்வாக அதிகாரியான ஒருவர், ஜீலை மாத்த்தின் தொடக்கதிலேயே திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணியிடை நீக்கம் செய்தது. இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை அவர் மீறியதாக இந்த நடவடிக்கை கடந்த வாரம் எடுக்கப்பட்டது என தெரிவித்திருந்தது.
திருப்பதி கோயிலுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் சாமி தரிசனம் செய்ய கடந்த வாரம் வந்திருந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் இந்துக்களுக்கு வேலை கொடுப்பார்களா? என கேள்வியை கேட்டார்.. அதன் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டும் ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் பணிபுரிகின்றனர் என்றும், மாற்று மதத்தினரை சீக்கிரமாக வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது..