சுந்தரமூர்த்தி , கலிக்காமர்
சுந்தரமூர்த்தி , கலிக்காமர்  PT
கதைகள்

ஏயர்கோன் கலிக்காமரின் பக்தியை தெரிந்துக்கொண்டு சிவபெருமான் செய்தது என்ன?

Jayashree A

சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் ஏயர்கோன் கலிக்காமர். இவர் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அதனால் திருப்புன் கூரில் பல திருப்பணிகள் மேற்கொண்டார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் சிவபெருமானை பரவை நாச்சியாருக்காக தூதுவிட்ட செய்தி அறிந்து கோபம் கொண்டார் கலிக்காமர். ஒரு பெண்ணிற்காக இறைவனைத் தூது விடுவதா? இது மிகவும் மோசமான செயல். என்று சுநதரரின் மேல் கோவம் கொண்டார்.

ஆனால் சிவபெருமான் சிந்தனையோ வேறு. அவர், தனது அடியவர்களான சுந்தரமூர்த்தியாரையும் கலிக்காமரையும் நட்புகொள்ளச் செய்ய திருவுள்ளம் கொண்டார். அதனால் கலிக்காமருக்கு சூலை நோயை வரவழைத்தார். எத்தனையோ முயன்றும் கலிக்காமருக்கு நோய் குணமாகவில்லை. தன் நோயைக்குணமாக்கும்படி சிவபெருமானை வேண்டினார் நாயனார்.

ஒருநாள் கலிக்காமரின் முன்னே தோன்றிய சிவபிரான், சுந்தரமூர்த்தியைச் சந்திப்பாயாக, அவன் ஒருவனே உன் நோயைக்குணமாக்குவான் என்று வாக்கருளினார். ஆனால் கலிக்காமரோ என் குலமே அடியார்க்கு திருத்தொண்டு செய்த குலம். ஆனால் அடியவராயிருக்கும் தகுதி பெறாத சுந்தரன் எப்படி என் நோயைத் தீர்ப்பான். அவனால் தீர்க்கப்படும் என் நோய் குணமாகா விட்டாலும் பரவாயில்லை என்று பதில் கூறினார்.

ஆனாலும் கலிக்காமரின் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் இறைவனும் சுந்தரரின் கனவில் தோன்றி, கலிக்காமன் சூலை நோயால் அவதிப்படுகிறான். அவன் நோயைத் நீதன் தீர்க்க வேண்டும் என்று கூறினார். சுந்தரரும், தான் கலிக்காமரைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துவிட்டு திருப்புன்கூர் புறப்பட்டார்.

ஆனால், சுந்தரரால் தன் நோய் தீர கூடாது என்று நினைத்த கலிக்காமர் வாளால் தன் வயிற்றைக் கிழித்து உயிரை விட்டார். கலிக்காமரின் மனைவி அதைக்கண்டு, தானும் உயிர்விடத் துணிந்தார்.

ஆனால் அதற்குள் சுந்தரர் கலிக்காமரின் வீட்டை அடைந்தார். உடனே கலிக்காமரின் மனைவி இறந்த தன் கணவரின் உடலை மறைத்து வைத்துவிட்டு சுந்தரரை வரவேற்று உபசரித்தார்.

சுந்தரரும் கலிக்காமரின் சூலை நோயைக் குணமாக்கத்தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார். கலிக்காமரை அழைத்தார். ஆனால் கலிக்காமரின் மனைவியாரோ உண்மையை மறைத்தார்.

இருப்பினும் அவ்வீட்டுப் பணியாள் மூலம் உண்மையை அறிந்த சுந்தரர், கலிக்காமரின் உடலைச் சென்று பார்த்தார். தானும் உயிர்விடத் துணிந்து வாளை எடுத்தார். அந்நேரம், சிவனருளால் உயிர்பெற்றெழுந்தார் கலிக்காமர். தன் உயிரை மாய்த்துக் கொள்ளவிருக்கும் சுந்தரரை தடுத்தார் அவரை வணங்கினார்.

அந்நாள் முதல் இருவரும் நண்பர்களானார்கள். இருவரும் இணைந்தே சிவபெருமானைத் தொழுதார்கள். இவ்வாறு வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் திருத்தொண்டுகள் பல புரிந்து சிவலோகம் சென்றடைந்தார்.