Madurai therottam Pt web
ஆன்மீகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.. அப்போது ஹரஹர மகாதேவா கோஷங்கள் விண்ணதிர லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..

Vaijayanthi S

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிகள், அம்மன் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..

இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் நேற்று விமர்சியாக நடைபெற்றது. திருக்கல்யாணத்துக்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர். மீனாட்சியின் இந்த திருக்கல்யாணத்தை பார்த்தால் அடுத்த ஒரு வருடத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்கள் சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது..

தேரோட்டம்

அதனைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டத்தை முன்னிட்டு சாமி இன்று அதிகாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் எழுந்தருளி கீழமாசி வீதியிலுள்ள தேரடிக்கு 5.05 மணிக்கு கோயிலிருந்து புறப்பட்டு. தேரடி கருப்பணசாமியிடம் சிறப்பு பூஜை செய்து உத்தரவு பெற்று பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் தனித்தனி தேரில் எழுந்தருளினார்.

தேரில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை முடிந்து காலை 6.15 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முதலில் சுவாமி தேர் புறப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அம்மன் தேர் 6.30மணியளவில் புறப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் உலா வந்தது.

Meenakshi amman

அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’ என்ற கோஷங்களை விண்ணதிர முழங்கினர். வழிநெடுகிலும் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் குறிப்பாக இளைஞர்கள் சோர்ந்துவிடாமல் இருக்க தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர்மோர், பானகம், சர்பத், ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை ஆங்காங்கே பொதுமக்கள் வழங்கினார். பாரம்பரிய இசைக்கருவிகள் மூலம் சிவபக்தர்கள், வாசித்தும், இசைத்தும் சிவபெருமானை வழிபாடு செய்தனர்.

இப்படி கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்டம் காரணமாக மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.. இதில் ஏற்கனவே கள்ளழகர் மதுரை வந்துவிட்ட நிலையில், மதுரையே சும்மா அதிரும் வகையில் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது..