வாகனங்களுக்கான வரி உயர்வு
வாகனங்களுக்கான வரி உயர்வு pt web
மோட்டார்

தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் 5% வரி உயர்வு

PT WEB

சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்த போக்குவரத்துத்துறை தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் வரி விதிப்பு முறைகளில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரி உயர்த்தபட்டுள்ளது.

அதன்படி வாடகை மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி நான்காயிரத்து 900 ரூபாயாகவும், 35 நபர்களுக்கு மேல் பயணிக்கும் வாகனங்களுக்கு மூவாயிரம் ரூபாயாகவும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மூவாயிரம் ரூபாய் முதல், நான்காயிரம் ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது .

மேலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு, ஆயிரத்து 400 ரூபாய் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை பயணிகளின் எண்ணிக்கைகேற்ப மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பள்ளி நிறுவனங்களின் பேருந்துகளுக்கும், பிற நிறுவனங்களின் பணியாளர்கள் பேருந்துகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக புதிய இருசக்கர வாகனங்களின் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருந்தால் 10 முதல் 12 விழுக்காடு வரையும், அதற்கு மேல் இருந்தால் 18 முதல் 20 விழுக்காடு வரை வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் பழைய வாகனங்களுக்கும் 8 முதல் 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 15ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு பசுமை வரியாக 5 ஆண்டுகளுக்கு 750 ரூபாயும், மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயாகவும், சாலை பாதுகாப்பு வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாயும், இலகுரக வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு மூவாயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.