மத்திய அரசு அறிமுகம் செய்யும் 'பாரத் டாக்ஸி' செயலி, பயணிகளுக்கு நிரந்தர கட்டணத்துடன் பாதுகாப்பான சேவையை வழங்குகிறது. டெல்லியில் முதற்கட்டமாக அறிமுகமாகும் இந்த சேவை, 600 ஓட்டுநர்களுடன் தொடங்கி, டிசம்பருக்குள் 5,000 ஓட்டுநர்களாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நகரப் பயணங்களில் இன்று ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் அத்தியாவசியமாகிவிட்டன. இவற்றுக்குத் தனியார் செயலிகள் மூலம் முன்பதிவு செய்வது எளிதாக இருந்தாலும், அந்த வசதிக்கு நாம் கொடுக்கும் விலை மிகவும் அதிகம்! தற்போதுள்ள தனியார் டாக்ஸி செயலிகளில் நிரந்தரமான கட்டணம் இல்லை என்பதுதான் வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய தலைவலி. பயணிகள் தேவை அதிகமாக இருக்கும் நேரங்கள், போக்குவரத்து நெரிசல் அல்லது முக்கியமாக மழைக்காலம் போன்ற சூழல்களில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.
பயணிகள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடப்பட்ட பின் திடீரென கூடுதல் தொகையைக் கேட்பது, அல்லது சில டிரைவர்கள் டிப்ஸ் கட்டாயம் என வலியுறுத்திய பின்னரே பயணத்தை ஏற்க முன்வருவது போன்ற அனுபவங்களும் வாடிக்கையாளர்களுக்கு நேரிடுகின்றன. இந்தக் கட்டணச் சுரண்டலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில்தான், மத்திய அரசு 'பாரத் டாக்ஸி' என்ற புதிய செயலி அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இது, நாடு முழுவதிலும் உள்ள ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி பயணங்களுக்காக இந்திய அரசால் நடத்தப்படும் முதல் ஒருங்கிணைந்த தளமாகும்.
இப்புதிய சேவைக்கான தொழில்நுட்பச் சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், ஓரிரு வாரங்களில் முதற்கட்டமாக நாட்டின் தலைநகரான புது டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆரம்பத்தில் சுமார் 600 ஓட்டுநர்களுடன் இச்சேவை தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை நாடு முழுவதும் 5,000 ஓட்டுநர்களாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து, படிப்படியாக நாட்டின் மற்ற அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும். இதில் பயணிகளின் தேவைக்கேற்ப பிரத்யேகமாக மூன்று விதமான பயணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள இடங்களுக்கு அல்லது நகரின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிக்க உள்ளூர் சேவை. நகர எல்லையைத் தாண்டி மற்ற நகரங்களுக்கு அல்லது நீண்ட தூரம் பயணிக்கச் சிறப்புத் தேர்வு. வாகனத்தை ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்கு (எடுத்துக்காட்டாக, 8 மணிநேரம் வரை) முழுவதுமாக வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் வசதி.
மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ செயலியானது, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பொதுமக்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்து, "Sign up" பிரிவில் தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, OTP மூலம் உறுதிப்படுத்திய பின் சேவையைப் பயன்படுத்தலாம்.
இந்நிலையில், மத்திய அரசின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன், தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், தமிழகத்திலும் இதன் தேவை மிக அதிகம் என்று வலியுறுத்தியுள்ளார். "எனவே, டெல்லியில் அறிமுகம் செய்யும் அதே வேளையில், இந்தச் செயலியைத் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்," என்று மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் இந்த அதிரடித் திட்டம், பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் வருடமே கேரள அரசு “Kerala Savari" என்ற பெயரில் அரசு கால் டாக்ஸியை அந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.