
பயங்கரவாதத்தை முற்றிலும் பொறுத்துக்கொள்ள இயலாது என, ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதம் உட்பட அதன் அனைத்து வடிவங்களிலும், உலக நாடுகள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈரானுக்கு வரும் இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டும் என்று ஈரான் அரசு கூறியுள்ளது. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதால் இந்தியர்கள் ஈரானுக்கு வருவதற்கு விசா தேவை இல்லை என்று குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் முன்பு ஈரான் அனுமதித்திருந்தது. இதனைப் பயன்படுத்தி முகவர்கள் பலர் இந்தியாவிலிருந்து ஈரான் செல்பவர்களை ஏமாற்றுதல், ஆள்கடத்தல் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்கள். இதனைத் தடுப்பதற்காக ஈரான் அரசு, இந்தியர்கள் வரும் நவம்பர் 22 ஆம் தேதியிலிருந்து விசா எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மக்கள் நெருக்கம் மிகுந்த ஐன் அல்-ஹில்வே (Ain al-Hilweh) பாலஸ்தீனிய அகதிகள் முகாமில் உள்ள ஹமாஸின் பயிற்சி வளாகத்தை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இந்த வளாகம் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம், இராணுவ இடம் அல்ல என்றும் மாறாக முகாமின் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் வான்சாகச நிகழ்ச்சியில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் தங்கள் திறனை காட்டின. புகழ்பெற்ற B-52, F-35 LIGHTNING II, F-16 FIGHTING FALCON மற்றும் கடற்படையின் P-8 POSEIDON உள்ளிட்ட விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. F- 35 விமானங்கள் வானில் நிகழ்த்திய சாசகங்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. B-52 ரக விமானம் அதன் நீண்ட ஆயுட்காலத்தையும், F-35 அதன் ஐந்தாம் தலைமுறைத் திறனையும் காட்சிப்படுத்தின. வலிமையின் மூலம் அமைதி என்ற கோட்பாட்டுடன் அமெரிக்க வான்படையினர் இந்த சாசக நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலத்தில் பதுங்கியிருந்த தாலிபான் அமைப்பைச் சேர்ந்த 15 பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கைபர் பாக்துங்வா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தாலிபான்கள் 10 பேரை சுட்டுக்கொன்றனர். வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருந்த மேலும் 5 பேரையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய குழுவினர் நேற்று அதிகாலை ஒரு பள்ளி விடுதி மீது தாக்குதல் நடத்தி 25 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றனர். இந்தத் தாக்குதலில் பள்ளி ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். பொதுமக்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதையே தொழிலாகக் கொண்ட ஆயுதக் கும்பல்கள் அதிகரித்திருப்பதால் நைஜீரியாவின் இந்தப் பகுதி தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
தென்அமெரிக்க நாடான சிலியில் பனிப்புயலில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். பட்டகோனியாவில் இருக்கும் டாரஸ் டெல் பைன் தேசியப் பூங்காவில் பனிப்புயல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மெக்சிகோ, ஜெர்மனி, பிரிட்டனை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய காவல் துறை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டி இல்லாமல் இந்தச் சிக்கலான மலைப் பாதைக்குச் சென்றதாக உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார்.
இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான Cloudflare-இல் ஏற்பட்ட பெரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலக அளவில் பல இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் முடங்கின. latent bug-ஆல் ஏற்பட்ட இந்தச் சிக்கலால், எக்ஸ், ChatGPT, Spotify, Canva உள்ளிட்ட முக்கிய தளங்கள் சில மணி நேரம் செயல்படவில்லை. இது சைபர் தாக்குதல் அல்ல என்றும், அதிகப்படியான டிராஃபிக்கை நிர்வகிக்கத் தேவையான கோப்பு எதிர்பாராத விதமாக பெரிதாகி, அமைப்பை செயலிழக்கச் செய்ததாலே இந்த பாதிப்பு ஏற்பட்டது எனவும் Cloudflare விளக்கமளித்துள்ளது.
சீனா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தன் நாட்டு மக்களை ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. சீனர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தென்பட்டாலோ சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ அதிகாரிகளிடம் உடனே தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, தைவானை கைப்பற்ற சீனா முயல்வது தங்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி கூறியிருந்த நிலையில் இது இரு நாடுகளுக்கிடையிலான பகையை மேலும் வளர்த்துவிட்டுள்ளது.
தொடர்ந்து, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, அந்நாட்டை சுற்றி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதையடுத்து, சீனா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என அச்சத்தில் உள்ள இதில் தாக்குதல்கள் நடக்கும் போது மக்கள் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. மேலும், சீனாவின் பொய் தகவல்களை நம்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை ‘காப்பி கேட்’ என எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். புரோஜெக்ட் புரோமிதியஸ் (Project Prometheus) என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு இணை தலைமைச் செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் பொறுப்பேற்கிறார். இந்நிலையில், பெசோஸ் தன்னைப் போலவே ஏஐ நிறுவனத்துக்கு வருவதை காப்பி கேட் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.