Mango Halwa FB
லைஃப்ஸ்டைல்

மாம்பழ அல்வா செய்ய தெரியுமா? இதோ இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..

மாம்பழத்தில் அல்வாவா? கேட்கும்போதே சூப்பராக இருக்கிறதே சாப்பிட்டால் எப்படி இருக்கும்.. ஆமாங்க மாம்பழத்தில் அல்வா செய்தால் அவ்வளவுதான் உங்க வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்..

Vaijayanthi S

மாம்பழ சீசன் இன்னும் முடியாமல் இருக்கிறது.. எங்கு பார்த்தாலும் மாம்பழம்தான் தெரிகிறது.அப்படி அதிகமாக கிடைக்கும் சீஷனல் பழங்களை வைத்து ருசியான இனிப்பு வகைகளை செய்துக் கொடுத்தால் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. அப்புறம் பாருங்க பீட்சா வேணும், பர்கர் வேணும்னு கேட்கவே மாட்டார்கள்.. அந்த அளவிற்கு நீங்கள் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகள் ருசியாக இருக்கும். அதற்கு காரணம், பழங்களை வைத்து அல்வா போன்ற இனிப்புகளை அவர்கள் ருசித்து இருக்க மாட்டார்கள். அதனால் அது சாப்பிட்டவுடனேயே அவர்களுக்கு பிடித்துவிடும்.. அந்த வகையில் இப்போது அதிகமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் மாம்பழங்களை வைத்து அல்வா செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க...

மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்

1. மாம்பழ கூழ் - 2 கப்

2. சர்க்கரை - 1/4 கப்

3. ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

4. குங்குமப்பூ - 1 டீஸ்பூன்

5. நெய் - 3 டீஸ்பூன்

6. முந்திரி - 8-10 (நறுக்கியது)

7. பிஸ்தா 8-10 (நறுக்கியது)

mango

மாம்பழ அல்வா செய்முறை

1. முதலில் மாம்பழ கூழை ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

2. அதன் பிறகு, அதில் சர்க்கரையை கலக்கவும். சர்க்கரை சேர்க்கப்படும்போது, கலவை முதலில் திரவமாக மாறி பின்னர்தான் கெட்டியாக மாறும்.

3. அது கெட்டியாகி ஒட்டிக்கொள்ள ஆரம்பித்ததும், சில நிமிடங்களுக்குப் பிறகு 1 டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து, அதனை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

4. நெய் அதில் நன்றாக கலக்கும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்..

5. அது இறுதியில் ஒன்றாக இணைந்து ஒரு பந்து போல உருள ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து பிறகு அனைத்தையும் ஒன்றாக கிளறி விட வேண்டும்.

6. இந்த ஹல்வாவில் முந்திரியை 1/2 டீஸ்பூன் நெய்யில் பொன்னிறமாகும் வரை வறுத்து கலந்து விட வேண்டும். இப்போது டேஸ்டான ஸ்வீட் மாம்பழ ஹல்வா ரெடி.. சூடாக பரிமாறலாம்..

halwa

மாம்பழத்தின் நன்மைகள்

1. மாம்பழத்தில் விட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அத்துடன் இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

2. மேலும் மாம்பழத்தில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது..

3. மாம்பழத்தில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள தோலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன..

4. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துகள் செரிமானத்தை சரிச்செய்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.

5. அத்துடன் இதில் உள்ள கரோட்டினாய்டுகள் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன..

கர்ப்பிணி பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை உட்கொள்ளும்போது மருத்துவரை அணுகுவது நல்லது..