விமான பயணிகளுக்கான உரிமைகள் pt web
லைஃப்ஸ்டைல்

விமானங்கள் தாமதம் அல்லது ரத்தாகிறதா? பயணிகளுக்கு இருக்கும் உரிமைகள் என்ன?

விமானங்கள் தாமதம் அல்லது ரத்தாகும் போது பயணிகள் பெறவேண்டிய உரிமைகள் என்ன? மற்றும் உரிமைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்துப் பார்க்கலாம்..

PT WEB

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. தொழில்நுட்பக் கோளாறுகள், பாதகமான காலநிலை மற்றும் புதிய பணி விதிகள் ஆகிய இடையூறுகளால் சேவைகள் பாதிக்கப்பட்டதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிர்வாகம், விரைவில் சேவைகள் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்திருந்தது. ஆனால், நேற்றும் இதே பிரச்னை நாடு முழுவதும் தொடர்ந்தது. 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. போதிய அளவில் விமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்றும் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Indigo

பெரும்பாலான நடுத்தர வர்க்க இந்தியர்கள் முக்கியமான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே, உடனடியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு விமான போக்குவரத்து சேவையை தேர்வு செய்து பயணிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, விமான அட்டவணைகளில் ஏற்படும் குளறுபடி, விமானங்கள் ரத்து போன்றவை பயணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால், விமான சேவை நிறுவனங்கள் எளிதாக பயணிகளிடம் மன்னிப்பு கோரி கடந்து செல்கின்றன.

இந்நிலையில், ஒரு விமானம் ரத்து அல்லது தாமதம் ஏற்படும் போது பயணிகளுக்கு இருக்கும் உரிமைகள் குறித்துப் பார்க்கலாம். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) 2019 ஆம் வெளியிட்ட பயணிகளின் உரிமைகள் குறித்தான சாசனம், விமானங்கள் தாமதம் அல்லது ரத்தாகும் போது, பயணிகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியிருக்கிறது.

விமான தாமதம்

மேலும், விமானங்கள் தாமதமாவது என்பது, உள்நாட்டு விமானப் போக்குவரத்தை பொறுத்தவரை 2 மணி நேரத்திற்கு மேல் சென்றாலே விமானப்பயணிகள் தங்களது உரிமைகளைப் பெற முடியும். ஆனால், சர்வதேச விமானங்களைப் பொறுத்தவரை 6 மணி நேரத்திற்கு தாமதமானால் மட்டுமே, உரிமைகளைப் பெற முடியும். அவ்வாறு, நாம் எங்கு பயணிக்கிறோம், எந்த விமான நிறுவனத்தை தேர்வு செய்து பயணிக்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பயணிகள் உரிமை கொள்கைகளின் படி, 2 மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதமாகும் போது பயணிகளுக்கு விமான நிறுவனம் இலவச உணவு மற்றும் சிற்றுண்டியை வழங்க வேண்டும். தொடர்ந்து, 6 மணிநேரத்திற்கு மேல் விமானம் தாமதமாகும் போது, மாற்று விமானத்தை பயணிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் வேண்டும் அல்லது பயணச்சீட்டிற்கான முழுத்தொகையயும் திருப்பி அளித்தல் வேண்டும். மேலும், பயணிகளுக்கு எது விருப்பமோ அதையே, விமான நிறுவனங்கள் செய்து கொடுத்தல் வேண்டும்.

24 மணி நேரம் விமானம் தாமதமாகும் போது, பயணிகளுக்கு விமான நிறுவனம் தங்குவதற்கான அறை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் வேண்டும். இந்த தாமதங்கள் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் போது பயணிகள் இந்த உரிமைகளைப் பெற முடியாது. விமான நிறுவனத்தின் சொந்தக் காரணங்களால் இந்த தாமதம் அல்லது ரத்து ஏற்படும் போதே விமான பயணிகள் இந்த உரிமைகளைப் பெற முடியும்.

விமான நிறுவனத்தால் ஒரு விமானம் ரத்து செய்யப்படும் பட்சத்தில், அது புறப்படும் நேரத்திற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய விதி. அவ்வாறு, தெரிவிக்கப்படாத பட்சத்தில் 5,000 முதல் 2,10,000 வரை விமானக் கட்டணத்துடன் கூடிய இழப்பீட்டுத் தொகையை நாம் பெற்றுக் கொள்ள முடியும். பணத்தை திருப்பியளிக்க 7 நாட்கள் விமான நிறுவனத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

விமான தாமதம்

எங்கே புகாரளிப்பது அல்லது உரிமைகளை கோருவது?

விமானம் தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ குறிப்பிட்ட விமான நிறுவனத்திடம் நாம் கோரிக்கைகள் வைக்க இயலும். அந்நிறுவனம் கோரிக்கைகளை நிராகரித்தால் உரிய ஆதாரங்களைக் (ஸ்கிரீன் சாட், பயணச் சீட்டு) கொண்டு ஏர்சேவா செயலி அல்லது www.airsewa.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். தொடர்ந்து, ஒவ்வொரு விமான நிலையத்தில் இருக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் அலுவலகத்தின் நோடல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.