சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் குழும சிஇஓ பதவியில் இருந்து தீபிந்தர் கோயல் விலகியுள்ளார்.
உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் (Zomato) தாய் நிறுவனமான எடர்னல் ( Eternal), இன்று உயர்மட்ட அளவில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது. நிறுவனர் தீபிந்தர் கோயல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேநேரத்தில், அவர், துணைத் தலைவராகவும், நிறுவனத்தின் குழுவில் இயக்குநராகவும் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பிளிங்கிட் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் சிங் திண்ட்சா புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார், இந்த மாற்றம், பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குருகிராமை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1.02 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான ரூ.650 மில்லியனைவிட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.
விலகல் குறித்து தீபிந்தர் கோயல், "எடர்னல் எப்போதும் எனது வாழ்நாள் பணியாகவே இருக்கும்" என்றும், இந்த மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்காது’’ என்றும் அவர் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ’’எடர்னல் போன்ற ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சட்டப்பூர்வ எதிர்பார்ப்புகளுக்கு முழுமையான கவனம் தேவைப்படுகிறது. ஆனால், தான் தற்போது அதிக ரிஸ்க் மற்றும் சோதனைகள் நிறைந்த புதிய யோசனைகளை ஆராய விரும்புவதால், அந்த முயற்சிகளை நிறுவனத்திற்கு வெளியே மேற்கொள்வது சிறந்தது என தோன்றுகிறது’’ என தனது விலகல் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.