ஸ்ரீதர் வேம்பு x page
இந்தியா

ZOHO நிறுவனத்தின் CEO பதவியை ராஜினாமா செய்த ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

ZOHO (ஸோஹோ) மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ஸ்ரீதர் வேம்பு, ராஜினாமா செய்த நிலையில், அதற்குப் பதில் அந்த நிறுவனத்தின் 'Chief Scientist' என்ற பதவியை ஏற்றுள்ளார்.

Prakash J

ZOHO (ஸோஹோ) மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ஸ்ரீதர் வேம்பு, ராஜினாமா செய்த நிலையில், அதற்குப் பதில் அந்த நிறுவனத்தின் 'Chief Scientist' என்ற பதவியை ஏற்றுள்ளார். அதேநேரத்தில், ZOHO மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு ஷைலேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது வலைதளப் பக்கத்தில், “புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், நாம் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நான் எனது முழுக் கவனத்தையும் செலுத்துவது சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இதைக் கருத்தில் கொண்டு ZOHO கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியிலிருந்து விலகுகிறேன். Chief Scientist என்ற புதிய பதவியை ஏற்றுக்கொள்கிறேன். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இனி முழுக் கவனத்தையும் செலுத்துவேன். மேலும், ஆற்றலுடனும் வீரியத்துடனும் எனது புதிய வேலையை எதிர்கொள்வேன். தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் மீண்டும் கைகோர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த ஸ்ரீதர் வேம்பு?

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ZOHO நிறுவனத்தை, ஸ்ரீதர் வேம்பு தனி ஒருவராக தொடங்கினார். இந்த நிறுவனம் வணிக மென்பொருள் சந்தையில் மைக்ரோசாப்ஃட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஆரக்கிள் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ZOHO அதன் 55+ வணிக பயன்பாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,00,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

sridhar vembu

1989-ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஸ்ரீதர் வேம்பு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

2005-ஆம் ஆண்டு ஸோகோவை நிறுவுவதற்கு முன்பு, அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள குவால்காமில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2024-ம் ஆண்டில் இந்தியாவின் 39வது பணக்காரராக ஸ்ரீதர் வேம்புவை மதிப்பிட்டது. அவரது நிகரமதிப்பு டாலர்5.85 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.