’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ - ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ - ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!
’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ - ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

Zoho இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில புகார்களை தொடுத்திருந்தார். குறிப்பாக ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தங்களின் மகனையும் கைவிட்டதாகவும், தனது நியாயமான பங்கைப் பெறுவதைத் ஸ்ரீதர் தடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதை மறுத்து நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.

இந்தியாவில் பிறந்தவரான ஸ்ரீதர் வேம்பு, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு வாழ்ந்து, அங்கிருந்தபடியே ZOHO நிறுவனத்தை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு, இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்தார் அவர். அதன்படி கிட்டத்தட்ட $5 பில்லியன் மதிப்புடன், கலிபோர்னியாவை விட்டு வெளியேறி, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மத்தலம்பாறை கிராமத்தில் குடியேறினார் அவர். ஜூன் 2020 இல் ஃபோர்ப்ஸ் இந்தியாவிடம் வேம்பு கூறுகையில், "இந்த கிராமங்களில் எனது பணியாளர்கள் வசிக்க வேண்டும். நானும் நிறைய கிராமப்புற முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளேன்” என்றார்.

அதன்பின் அவர் இந்தியாவிலேயே தான் இருந்தார். இந்நிலையில் அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன், தற்போது அவர்மீது பரபரப்பு குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். அதன்படி, “வேம்பு இந்தியாவிலிருந்து 2020 தொடக்கத்திலேயே கிளம்பிய நிலையில், அதன்பின் அவர் எங்களை காண கலிஃபோர்னியா வருவதை தவிர்த்துவிட்டார்” என்றுள்ளார். பிரமிளா ஸ்ரீனிவாசன் தரப்பிலான தகவல்களின்படி, நவம்பர் 2020-ல் ஸ்ரீதர் வேம்பு, மனைவி பிரமிளாவை வாட்ஸ்-அப்பில் தொடர்புகொண்டு தனக்கு விவாகரத்து வேண்டுமென கேட்டுள்ளார். பின் ஆகஸ்ட் 2021-ல் அதற்கு தேவையான தகவல்களையும் பதிவு செய்துவிட்டதாக தெரிகிறது.

கலிபோர்னியாவில் நடக்கும் இவர்களின் விவாகரத்து வழக்கில், ஒரு சிக்கலான பரிவர்த்தனையில் வேம்பு வேண்டுமென்றே தனது பங்குகளில் ஒரு பெரிய பகுதியை வேறு சிலர் பெயருக்கு மாற்றி, தன்னிடமிருந்து அவற்றை பறித்துவிட்டதாக கூறியுள்ளார் பிரமிளா. தற்போது அந்தச் சொத்துகள் ZOHO-வின் அறிவுசார் சொத்துக்களாக இந்தியாவிற்கும், பெரும்பாலான பங்குகள் வேம்புவின் சகோதரி மற்றும் அவரது கணவருக்கு தரப்பட்டுவிட்டதாகவும் பிரமிளா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் பிரமிளா அளித்துள்ள மனுவில், “என் கணவர் எங்களின் 29 வருட திருமணவாழ்விலிருந்து, கடந்த 2020 ஆம் ஆண்டில் என்னையும் எங்கள் மகனையும் கைவிட்டது மட்டுமல்லாமல், எங்களுக்கிருந்த சொத்துகளை பெயர்மாற்றி அவரது குடும்பத்தினருக்கே கொடுத்துள்ளார். அதுவும் பணமோ பொருளோ வாங்காமல் 'விற்பனை' செய்யவும் அவர் முடிவு செய்தார்” என்று கூறியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஃபோர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “கலிஃபோர்னியாவில், மனைவியின் சொத்துகளை அவருக்கு தெரியாமல் பெயர் மாற்றுவதென்பது சட்டத்துக்கு புறம்பானது. இருவருக்குமே தொடர்புடைய சொத்து என்கையில், 50-50 பங்கு இருவருக்குமே உள்ளது” என்றுள்ளார்

இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்புவிடம் ஃபோர்ப்ஸ் கேட்டுள்ளது. அவரும், “நான் அப்படி என் சொத்துகளை யாருக்கும் தரவில்லை; ZOHO நிறுவனங்களில் எனது நிதி ஒருபோதும் குறையவில்லை, எனவே நான் எதையும் மறைக்கவில்லை” என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இன்று பூதாகரமான நிலையில், ஸ்ரீதர் வேம்பு ட்விட்டர் வழியாகவும் இதற்கு பதிலளித்துள்லார். அதில் அவர், “எனது குணாதிசயங்கள் மீதான மோசமான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் பகிரப்படுகின்றன. அவற்றுக்கு நான் பதிலளிக்க வேண்டிய நேரம் இது. இது ஒரு ஆழமான வேதனையான தனிப்பட்ட பதிவென்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது வணிக வாழ்க்கைக்கு மாறாக, ஒரு நீண்ட சோகத்தால் நிறைந்தது” எனக்குறிப்பிட்டு நீண்ட பதிவொன்றை போட்டிருக்கிறார். 

அதன் முழு விவரம்: “ஆட்டிஸம் (இவர்களின் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ளது), எங்கள் வாழ்க்கையை அழித்து, என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனச்சோர்வடையச் செய்தது. என் மனைவியும் நானும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிஸத்துடன் போராடிவருகிறோம்; அவர் மிகச்சிறந்த அம்மா...! அவருடன் இணைந்து எங்கள் மகனை பாதுகாக்க நானும் போராடினேன்

ஆனால் இன்றுடன் 24 வயதாகும் என் மகனை எங்களால் மீட்கவே முடியவில்லை; என் மகன் கிராமத்தில் அவனை நேசிப்போருக்கு மத்தியில் இருந்தால் கொஞ்சம் மீள்வான் என நினைத்தே இந்தியா வந்தேன். ஆனால் நான் என் மகனை கைவிடுவதாக என் மனைவி புரிந்துகொண்டுவிட்டார்... இந்த சிக்கலில் எங்கள் திருமண வாழ்வே சிக்கலாகிவிட்டது.

இதில் விவாகரத்து முடிவுக்கு வந்தோம். எதிர்பாராவிதமாக, எங்கள் திருமணத்தின் முடிவு, புதிய சிக்கலை கொண்டுள்ளது. அதன்படி என் மனைவி நீதிமன்றத்தில் என்னுடைய சொத்துகள் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார். மேற்கொண்டு ஊடகங்களை அவர் நாடியுள்ளார். இவையாவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கிலுள்ளது; என்னுடைய பதில்களும் பொதுவெளியில்யே உள்ளன.

இந்த இடத்தில் நான் எவ்வித ஐயமுமின்றி சிலவற்றை சொல்ல நினைக்கிறேன். அது, நான் நிறுவனத்தில் என்னுடைய பங்குகளை யாருக்கும் மாற்றிக்கொடுக்கவேயில்லை. நான் எங்கள் (மனைவியை குறிப்பிட்டு) வாழ்வின் முதல் 24 வருடங்களை அமெரிக்காவில்தான் வாழ்ந்தேன்; எங்களின் 27 வருட வாழ்க்கையும் நிறுவனமும் இந்தியாவில் கட்டப்பட்டது. இதில் எங்களின் உரிமையும் பிரதிபலிக்கிறது.

அப்படியிருக்கையில், நான் என் மனைவி மற்றும் மகனின் சொத்துகளை பறித்துவிட்டேன் என்பது கற்பனையானது மட்டுமே. அவர்கள் என்னை போலவே பணக்கார வாழ்க்கையை முழுமையாக கொண்டாடி வாழ்ந்துள்ளனர். நான் முழுமையாக அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளேன். என்னுடைய கடந்த 3 ஆண்டுகால அமெரிக்க சம்பளம் - என் வீடு எல்லாமே அவரிடமே உள்ளன; அவர் நடத்திவரும் அமைப்பையும் சோஹோவே ஆதரிக்கிறது.

இந்த குழப்பம்யாவும் குடும்பப்பகை காரணமாக என் சித்தப்பாவால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவர் தனிப்பட்ட வகையில் என் அப்பாவுடன் பல ஆண்டுகளாக முன்பகைகளை கொண்டு, இப்படி செயல்படுகிறார். சோகம் என்னவெனில், அவரையே என் மனைவி இப்போது நம்புகின்றார். ஆட்டிஸத்துடனான எங்கள் போராட்டத்தில் என் மனைவிக்கு ஏற்பட்ட விரக்தியால், இப்படி செய்கிறார். நாங்கள் மிகவும் மோசமான தனிப்பட்ட வாழ்வை வாழ்ந்துள்ளோம். அப்படியிருக்க, என் சித்தப்பாவின் தவறான வழிநடத்தலால் இப்போது இவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மற்றபடி நான் எப்போதும் என் மகன், மனைவி பிரமிளாவை அவர்களை ஆதரித்தே வருகிறேன். நான் வாழும் நாட்கள் வரை அவை தொடரும். உண்மையும் நீதியும் வெல்லும் என இப்போதும் நம்புகிறேன். என்றாவது ஒரு நாள் என் அன்பு மகன் என்னுடன் இங்கே சேர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை” என்றுள்ளார்.

- இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com