youtube x page
இந்தியா

யூடியூப் மூலம் 21,000 கோடி ரூபாய் சம்பாதித்த இந்தியர்கள்!

யூடியூபில் பதிவுகள் இடுவது மூலம் இந்தியர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

Prakash J

பொழுதுபோக்குத் துறை தொடர்பான கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய யூடியூப் தலைமை செயல் அதிகாரி நீல்மோகன், “கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து 10 கோடிக்கும் அதிகமான சேனல்கள் வீடியோக்களை அப்லோடு செய்துள்ளன. அவற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களின் நாடாக மாறி வருகிறது. இந்திய கிரியேட்டர்களின் புதுப்புது வீடியோக்கள் வெளிநாட்டவரை வெகுவாக ஈர்க்கிறது. வெளிநாட்டவர்கள் இதுவரை 4,500 மணிநேரம் அளவுக்கு இந்திய யூடியூப் சேனல் கன்டென்டைப் பார்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய யூடியூபர்கள் ரூ.21 ஆயிரம் கோடியை வருமானமாகப் பெற்றுள்ளனர். வீடியோ பதிவிடுவோர் மற்றும் ஊடக நிறுவனங்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் இந்தியாவில் ரூ.850 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு இந்தியாவில் வீடியோ பதிவிடுவோர், அப்லோடு செய்த வீடியோக்களை வெளிநாட்டில் பயனர்கள் 45 பில்லியன் மணி நேரம் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) செலவிட்டுப் பார்த்துள்ளனர். இந்தியாவின் சிறப்பு என்ன என்பதை இந்திய வீடியோ பதிவிடுவோர் எடுத்துரைக்கின்றனர். குறிப்பாக வரலாறு, கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்களும் கண்டுகளிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, டிஜிட்டல் துறையில் வளர்ச்சியை உருவாக்கி உள்ளது. யூடியூப்பில் 2.5 கோடி அதிகமான சந்தாதாரர்களுடன், உலகின் எந்த தலைவருக்கு இல்லாத வகையில் பிரதமர் மோடி அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.