யோகி ஆதித்யநாத், பிரசாந்த் பூஷன் எக்ஸ் தளம்
இந்தியா

மகா கும்பமேளா | ”நீங்களே குடிச்சு காட்டுங்க”.. உ.பி. முதல்வருக்கு பிரசாந்த் பூஷன் சவால்!

திரிவேணி சங்கம பாக்டீரியா விவகாரம் தொடர்பாக, உ.பி. முதல்வருக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சவால் விடுத்துள்ளார்.

Prakash J

உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.

45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 56 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் 7 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மகா கும்பமேளா

இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்தன. பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது.

கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அத்துடன் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டது.

இதுகுறித்துப் பதிலளித்த உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான். ஏன் குடிக்கவும்தான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம். இதை அரசியலாக்குகின்றனர்” என தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்திருக்கும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ”கும்பமேளாவில் மக்கள் நீராடும் அந்த நதியிலிருந்து நீர் எடுத்து, மக்களுக்கு மத்தியில் குடிக்க வேண்டுமென யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவைக்குச் சவால் விடுகிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.