தீபக், ஷிம்ஜிதா முஸ்தபா எக்ஸ் தளம்
இந்தியா

வைரலான வீடியோ | அவமானத்தால் மரணமடைந்த கேரளா நபர்.. தலைமறைவான பெண் கைது!

கேரளாவில் பேருந்தில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Prakash J

கேரளாவில் பேருந்தில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் தீபக் என்பவர், தன்னுடைய வேலை சம்பந்தமாக கடந்த 15ஆம் தேதி கண்ணூர் சென்றார். அப்போது பேருந்தில் பயணம் செய்த தீபக், அருகிலிருந்து இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொட்டு அநாகநிகமாக நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண், தன்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோ ஒன்றை தீபக்கிற்கு தெரியாமல் எடுத்து இணையத்தில் பதிந்துள்ளார்.

இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் மேலான வியூஸ்களை கடந்ததோடு, சம்பந்தப்பட்ட தீபக் என்பவர் மீது எதிர்மறையான கமெண்ட்களும், வசைபாடுதல்களும் எழ வழிவகை செய்தது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படாமல் வீடியோ நேரடியாக ஆன்லைனில் அப்லோட் செய்யப்பட்டது. இந்தசூழலில் தன்மீதான மோசமான பழியை பொறுத்துக்கொள்ள முடியாத தீபக், அவமானத்தால் அதிக மனஅழுத்தத்திற்கு சென்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

பாலியல் சீண்டல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, வீடியோவை பகிர்ந்த பெண்மீது தான் தவறு என்றும், அவர் விளம்பரத்திற்காக இந்த குற்றத்தை செய்துள்ளார் என தீபக்கின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அப்பெண் குறித்தும், வெளியிடப்பட்ட வீடியோவிற்கான பின்னணி குறித்தும் விரிவான விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்த தீபக்கின் பெற்றோர், மனித உரிமைகள் ஆணையத்தை நாடப்போவதாக தெரிவித்திருந்தனர்.

தீபக், ஷிம்ஜிதா

தீபக்கின் மரணத்திற்கு வீடியோ பரப்பிய பெண்மீது புகார்கள் அதிகமானதை தொடர்ந்து இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை புகாரை பதிவுசெய்தனர். இதற்கிடையே, ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை கேரள காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.