பழங்குடி சமூக வாழ்க்கையானது, பல வகைகளில் மேம்பட்ட சுதந்திரத்துக்கும், தனிமனித விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது என்பதற்கு இப்போதும் உதாரணமாக இருக்கிறது, இமாச்சல பிரதேசத்தின் ஹேட்டி சமூக மக்களின் வாழ்க்கை. சமீபத்தில் இங்கு நடைபெற்ற ஒரு திருமணம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அப்படி என்ன இத்திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம் என்றால், மணமகன்களாக சகோதரர் இருவரை மணமகள் ஒருவர் திருமணம் செய்து கொண்டதுதான்.
ஸ்ரீமார் மாவட்டத்தின் ஷில்லாய் கிராமத்தின் பிரதீப் நெகி, கபில் நெகி என்ற இரு சகோதரர்களும் குன்ஹத் கிராமத்தின் சுனிதா சவுகானை தங்களது வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டனர்.. இந்த சகோதரர்கள் இருவரும் படித்து நல்ல வேலையில் உள்ளனர்.
இது குறித்து அந்த ஊர் மக்கள் கூறுகையில், இத்திருமணம் சம்பந்தப்பட்ட மூவரின் சொந்த விருப்பத்தின்பேரிலேயே நடைபெறுவதாகவும், ஹேட்டி (HATTEE) சமூகத்தின் பாரம்பரியத்தைக் காக்கும் வகையிலான இத்திருமணம் நடந்தது பெருமையாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இரு மணமகன்கள், ஒரு மணமகள் என்பது அங்கு பன்னெடுங்கால பாரம்பரியத்தைக் கொண்டது. இதற்கு காரணம் மூதாதையர் நிலத்தை பிரிக்கக் கூடாது, வீட்டைக் காப்பது, வருமானம் ஈட்டுவது உள்ளிட்டவற்றை ஆண்மகன்கள் பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும் என்பதேயாகும். இப்படி பல விஷயங்களை தங்கள் சமூகத்தினர் முக்கியமான விழுமியங்களாகக் கருதுவதாகக் ஊறார் கூறுகின்றனர்”. பெரும்பாலும் ஒரு பெண் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை அங்கு இருக்கிறது.
பெரும்பாலும் இத்தகைய திருமணங்கள் ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக நடைபெறும். ஆனால், நெகி சகோதரர்களும் சுனிதி சவுகானும் இந்நிகழ்வை பிரமாண்டப்படுத்துவதன் மூலம் தங்களது சமூகத்தின் பாரம்பரியத்தை வெளியுலகுக்கு அறிவிக்க முடியும் என்று கருதி ஆர்ப்பாட்டமாக நடத்தினர். திருமணத்தில் ஹேத்தி பழங்குடியின மக்கள் பெருமளவில் கூடி பஹாரி நாட்டுப்புற பாடல்களை உற்சாகம் பொங்கப் பாடி, பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்வோடு, மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இத்திருமணம் 3 நாள்களாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வெகு விமர்சையாக நடைபெற்றது.
மணமகன் மற்றும் மணமகள் என்ன சொல்கிறார்கள்?
இந்த திருமணம் பற்றிப் பேசிய பிரதீப், “இது ஒரு பரஸ்பர முடிவு” என்றும், இது நம்பிக்கை, அக்கறை மற்றும் பாரம்பரியம் குறித்த பொறுப்பு பற்றியது என்றும் கூறினார். “எங்கள் சமூகத்தின் வழக்கத்தை நாங்கள் பெருமைப்படுத்துவதற்காக இதை செய்தோம் என்றனர்..
மறுபுறம் கபில் கூறுகையில், "நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம். நான் வெளிநாட்டில் வசித்தாலும், இந்த திருமணம் எங்கள் மனைவிக்கு ஒரு ஒற்றுமையான குடும்பமாக ஆதரவு, பாதுகாப்பு மற்றும் பாசத்தை உறுதியாக தருவோம்” என்று பகிர்ந்து கொண்டார்.
கடைசியாக, மணமகள் இது குறித்து கூறுகையில், "இது என்னுடைய விருப்பம். நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை. இந்த பாரம்பரியத்தை நான் நன்கு அறிவேன், நான் அதை மனமுவந்து தேர்ந்தெடுத்தேன். நாங்கள் ஒன்றாக இந்த உறுதிமொழியை எடுத்தோம், மேலும் நாங்கள் எடுத்த இந்த முடிவில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
இந்தியாவில் பலதுணை மணம் (polygamy) என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் இருக்கும் சில குழுக்களுக்கு மட்டும் பல மனைவி மணம் (polygyny) செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஹேட்டி உள்ளிட்ட சில குழுக்களுக்கு பல கணவர் மணம் (polyandry) புரிந்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது.