திரிபுராவில் கடனை திருப்பி செலுத்தாத பெண்ணின் தலையை 20 பெண்கள் சேர்ந்து மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள பிசால்கர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டின் அருகில் இருந்த சுய உதவிக்குழுவில் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடனை அவர் திரும்பி செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 15-20 பெண்கள் கடன் பெற்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை வீட்டின் வெளியே இழுத்து வந்து, அவரின் பாதி முடியை மொட்டை அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பிஷல்கர் மகளிர் காவல் நிலையம் தானாக முன்வந்து பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி தாஸ் தெரிவிக்கையில், “ சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு பெண்ணைத் தாக்கியதை நாங்கள் கேள்விப்பட்டோம். குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பற்றி விசாரிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம், பின்னர் அவரது வீட்டில் இறக்கிவிட்டோம். உண்மை என்னவென்று நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். " என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “சம்பவத்தின் போது சமயலறையில் இருந்தேன். அப்போது சுமார் 15 - 20 பெண்கள் எனது வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது என் கணவர் வீட்டில் இல்லை. என் மைத்துனி சமயலறையில் இருந்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது சில ஆண்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், யாரும் எனக்கு உதவ முயற்சிக்கவில்லை.. கடனாக வாங்கிய பணத்தை ஒரே நாளில் திருப்பிசெலுத்துமாறு தெரிவித்தனர். என்னால் திரும்பி கொடுக்க முடியவில்லை ” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.