புதிய இபிஎஃப் திட்டத்தில், ஊழியர்கள் பிஎஃப் பங்களிப்பை 12% இலிருந்து 9% ஆகவோ அல்லது நிலையான ரூ.1,800 ஆகவோ குறைக்கலாம். இதனால் கையில் வரும் மாதச் சம்பளம் அதிகரித்தாலும், ஓய்வூதிய சேமிப்பு கடுமையாகக் குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பான சேமிப்பை விரும்புவோருக்கு 12% முறையே சிறந்தது என அவர்கள் கூறுகின்றனர்.
புதிய இபிஎஃப் திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்களின் பிஎஃப் பங்களிப்பை 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவோ அல்லது நிலையான ஆயிரத்து 800 ரூபாயாகவோ குறைத்துக் கொள்ளலாம். இதனால் மாதச் சம்பளம் உயர்ந்தாலும் ஓய்வூதியச் சேமிப்பு கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆபத்தில்லாத சேமிப்பை விரும்புபவர்களுக்கு 12 சதவீத முறையும், வீட்டுக்கடன் தவணை, குழந்தைகளின் கல்விச் செலவு போன்ற தற்போதைய அவசரத் தேவைகள் உள்ளவர்களுக்கு 9 சதவீத முறையும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தெரிந்தவர்களுக்கு ஆயிரத்து 800 ரூபாய் முறையும் பொருந்தும் என்கின்றனர் நிபுணர்கள். மாத அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் ரூபாய் உள்ள ஒருவர் 30 ஆண்டுகள் பணிபுரியும்போது, 12 சதவீதத்திற்குப் பதிலாக 9 சதவீதத்தைத் தேர்வு செய்தால் ஓய்வூதிய நிதியில் 25 லட்சம் ரூபாயும், ஆயிரத்து 800 ரூபாய் முறையைத் தேர்வு செய்தால் 65 லட்சம் ரூபாய் வரையும் பற்றாக்குறை ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிஎஃப் சேமிப்பைக் குறைக்கும் பல ஊழியர்கள் அந்தப் பணத்தை முதலீடு செய்யாமல் செலவழித்து விடுகின்றனர் என்றும், எனவே, பெரும்பாலானோருக்கு 12 சதவீத பங்களிப்பு முறையே பாதுகாப்பானது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.