அசாம் வெள்ளம் PTI
இந்தியா

அஸாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு.. நிலப்பரப்பை இழக்கும் அபாயம்!!

பருவமழைக் காலத்தில் இந்த ஆறுகளில் ஒரே நேரத்தில் நீர் பெருகி வழியும் போது, அஸாம் கடுமையான வெள்ளத்தில் மூழ்குகிறது.

PT WEB

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸாமில், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. இதற்குப் புவியியல் அமைப்பு, கடுமையான பருவமழை, காடழிப்பு மற்றும் ஆற்றுப்படுகை அரிப்பு ஆகிய பல காரணிகள் முக்கியப் பங்களிக்கின்றன. அஸாம் மாநிலம் இமயமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்காய், நாகா, காசி மற்றும் காரோ குன்றுகளால் சூழப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதம், பிரம்மபுத்திரா ஆறு மற்றும் அதன் 33 முக்கிய துணை ஆறுகளின் வெள்ளச் சமவெளிகளிலேயே அமைந்துள்ளது. பருவமழைக் காலத்தில் இந்த ஆறுகளில் ஒரே நேரத்தில் நீர் பெருகி வழியும் போது, அஸாம் கடுமையான வெள்ளத்தில் மூழ்குகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் செங்குத்தான மலைப்பகுதிகளிலிருந்து பாய்ந்து வரும் சியாங், திபாங் மற்றும் லோஹித் போன்ற ஆறுகள், பிரம்மபுத்திராவுடன் இணைகின்றன. இவை சமவெளிப் பகுதியை அடையும் போது நீரோட்டத்தின் வேகம் குறைந்து, தம்முடன் கொண்டு வரும் பெருமளவிலான வண்டல் மண்ணை ஆற்றுப்படுகையிலேயே படிய வைக்கின்றன.

காலப்போக்கில் இந்த வண்டல் படிவுகள் ஆற்றுப்படுகையின் ஆழத்தைக் குறைத்து, ஆற்றின் நீர்க் கொள்ளளவைப் பெருமளவில் பாதிக்கின்றன. இதனுடன், காடழிப்பு நடவடிக்கை மண் அரிப்பை அதிகரித்து, அதிகப்படியான வண்டல் மண் ஆறுகளில் சேர வழிவகுக்கிறது. மேலும், வேகமாகப் பாயும் பிரம்மபுத்திரா ஆறு ஒவ்வொரு ஆண்டும் தன் கரைகளை அரித்து வருகிறது. அரசு தரவுகளின்படி, 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆற்றுப்படுகை அரிப்பினால் மட்டுமே அஸாம் மாநிலம் 4 புள்ளி 27 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை இழந்துள்ளது. இயற்கை அமைப்பும் மனித தலையீடுகளும் இணைந்து, அஸாமை இந்தியாவின் மிக முக்கிய வெள்ள அபாயம் நிறைந்த மாநிலமாக மாற்றியுள்ளன.