கேரளம் | இடுக்கி அருகே நிலச்சரிவு.. 7 மாவட்டங்களுக்கு ரெல் அலர்ட்!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கேரளா - தமிழ்நாடு எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட அடூர் மலை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிலச்சரிவில் சுமதி என்ற பெண் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக அதிக கனமழை காரணமாக, இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்ப்ட்டிருக்கிறது. அடுத்த 48 மணி நேரமும் மாநிலத்தின் பல பகுதிகளில் மிகக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
