வியோமிகா சிங் எக்ஸ் தளம்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் | சாதித்த பெண் அதிகாரி.. யார் இந்த வியோமிகா சிங்?

ஆபரேஷன் சிந்தூர்’ என்பது ஓர் ஒற்றை எதிர்வினை அல்ல. மாறாக, பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் பரந்த கோட்பாட்டின் ஒரு பகுதியாகும்” என விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்கள் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆவர்.

தாக்குதல் குறித்து வியோமிகா சிங், “பாகிஸ்தானின் எந்தவொரு பதிலடியையும் சமாளிக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். மேலும் பாகிஸ்தான் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், இந்திய ஆயுதப்படைகள் பதிலடி கொடுக்கும். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது ஓர் ஒற்றை எதிர்வினை அல்ல. மாறாக, பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் பரந்த கோட்பாட்டின் ஒரு பகுதியாகும்” எனத் தெரிவித்தார்.

வியோமிகா சிங்

யார் இந்த வியோமிகா சிங்?

இந்திய விமானப் படையின் விங் கமாண்டரான வியோமிகா சிங், பொறியியல் பட்டம் பயின்றவர். ஆயுதப் படையில் சேருவதற்கு முன்பு NCCயில் இணைந்து பயிற்சி பெற்றிருந்தார். 2019, டிசம்பர் 18ஆம் தேதி இந்திய விமானப்படையில் (IAF) ஹெலிகாப்டர் விமானியாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அவரது குடும்பத்தில் ஆயுதப் படைகளில் சேர்ந்த முதல் நபரானார். ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு போன்ற மாநிலங்களின் உயரமான பகுதிகள், இந்தியாவின் மிகவும் சவாலான நிலப்பரப்புள் சிலவற்றில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார். அவர், 2,500 மணிநேரங்களுக்கு மேல் ஹெலிகாப்டரில் பறந்துள்ளார். தவிர, ஏராளமான மீட்புப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார். நவம்பர் 202இல், அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்கினார். 2021ஆம் ஆண்டில், வியோமிகா சிங், 21,650 அடி உயரத்தில் மணிராங் சிகரத்திற்கு முப்படையினரால் நடத்தப்பட்ட அனைத்து பெண்களும் கொண்ட மலையேறும் பயணத்தில் பங்கேற்றார்.