பிரதாப் சந்திர சாரங்கி  கோப்பு படம்
இந்தியா

ராகுல் மீது குற்றச்சாட்டு வைத்த எம்.பி பிரதாப் சாரங்கி குற்றச்செயல்களில் தொடர்புடையவரா? யார் இவர்?

தலையில் கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதாப் யார் என்று அலசினோம். அதன்முடிவில், இவர் பல குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளவராக இருந்தவரென தகவல்கள் கிடைக்கின்றன. சரி, யார் இவர்? பார்க்கலாம்...

சண்முகப் பிரியா . செ

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அம்பேத்கர் பெயரை உச்சரிப்பது பேஷனாகி விட்டது. இவரது பெயரை சொல்வதற்கு பதில் கடவுளின் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று பேசியது பெரிய சர்ச்சைக்குள்ளானது. இந்த பேச்சு, அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இரு அவைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் I.N.D.I.A. கூட்டணி எம்.பிக்கள் இன்று நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது பாஜக எம்.பி பிரதாப் சந்திர சாரங்கியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பாஜக சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலையில் காயமடைந்த பாஜக எம்.பி பிரதாப் சந்திரா ஊடகங்களிடம் பேசுகையில், “நான் படிக்கட்டுகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ராகுல் காந்தி வேகமாக வந்தார். மற்றொரு எம்.பியை என் மீது தள்ளிவிட்டார். அதில் எனக்கு காயம் ஏற்பட்டது” என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், தலையில் கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதாப் யார் என்று அலசினோம். அதன்முடிவில், இவர் பல குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளவராக இருந்த தகவல்கள் கிடைக்கின்றன. சரி, யார் இவர்? பார்க்கலாம்...

யார் இந்த பிரதாப் சந்திர சாரங்கி?

ஒடிசாவை சேர்ந்த இவர், கடந்த 1999 ஆம் ஆண்டில், பஜ்ரங் தள் தலைவராக இருந்தார் பிரதாப் சாரங்கி. அப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ மதத்தைப் பரப்புபவரான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள், ஒடிசாவில் உள்ள மனோகர்பூர் - கியோஞ்சர் கிராமத்தில் அவர்களது ஸ்டேஷன் வேகனில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இதனைச் செய்தது பஜ்ரங் தள்-ஐ சேர்ந்தவர்கள் என்பது பின்னாட்களில் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவ மிஷனரி குடும்பம்

அதுமட்டுமல்லாது கொலை செய்யும்போது பஜ்ரங் தள் ஜிந்தாபாத் எனக் கூச்சலிட்டது இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக அமைந்தது. விசாரணைக்குப் பிறகு, பஜ்ரங் தள் உடன் தொடர்பு கொண்டிருந்த தாரா சிங் என்ற முதன்மை குற்றவாளி உட்பட பிராதாப் சிங்கையும் சேர்த்து மொத்தம் 13 பேர் இவ்வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் பிரதாப் சாரங்கி தொடர்ந்து அதை மறுத்து வந்தார். இந்நிலையில்தான் இவ்வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு தாரா சிங்கிற்கு மரண தண்டனையும் பிரதாப் சாரங்கி உட்பட மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒடிசாவில் உள்ள உயர் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி பிரதாப் சாரங்கி உட்பட 13 நபர்களையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இருப்பினும் இவ்வழக்கை விசாரிக்கை வாத்வா கமிஷன் அமைக்கப்பட்டது. வாத்வா கமிஷனின் விசரணைப்படி பஜ்ரங்தள்-ஐ சேர்ந்த 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதேபோல கடந்த 2002ம் ஆண்டு பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து வலதுசாரி குழுக்களால் ஒடிசா மாநில சட்டமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்திலும் பிரதாப் சிங்கிற்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. இதில் கலவரம், தீ வைத்தல், தாக்குதல் மற்றும் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இப்படி அவர்மீது சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களில் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. பிபிசியின் ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் சாஹு என்பவர், தனக்கும் மற்றவர்களுக்கும் பிரதாப் நேர்காணல் வழங்கியபோது சிறுபான்மையிரக்கு எதிராக அவர் கடுமையாக பேசியதாக கூறியுள்ளார்.

இளமையில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் ,விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள் ஆகிய வலதுசாரி இயக்கங்களில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், பின்னர் பாஜகவில் இணைந்து 2வது முறையாக ஒடிசாவில் இருந்து எம்.பி-யாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.