மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுசூகி கடந்த 25ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. இந்திய வாகனத் துறையில் புரட்சி நிகழ்த்தியவர் ஒசாமு சுசூகி. இந்திய மக்களின் கார் கனவை நனவாக்கியவர். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கியவர். ஜப்பானியரான ஒசாமு சுசூகி இந்திய சந்தையில் கால் பதித்தது எப்படி, இந்திய வாகனத் துறையில் புரட்சி நிகழ்த்தியது எப்படி? பார்க்கலாம்.
அது 1970 காலகட்டம். பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். தனது மகன் சஞ்சய் காந்தியின் விருப்பத்தின் பெயரில், இந்தியாவில் குறைந்த விலை கார் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பொதுத் துறை நிறுவனமாக மாருதியைத் தொடங்கினார். ஆனால், நினைத்தபடி குறைந்த விலையில் கார்களைத் தயாரிக்க முடியவில்லை. பல்வேறு நெருக்கடி காரணமாக அந்தத் திட்டத்தில் முன்னேற்றம் நிகழவில்லை. இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனத்தோடு கைகோர்த்து செயல்பட இந்திய அரசு முடிவு செய்தது.
இந்தியாவில் அப்போது கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆண்டுக்கு 40 ஆயிரம் கார்கள் விற்றாலே அதிகம். இன்றைக்கு ஆண்டுக்கு 41 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன. இதனால், அப்போது இந்தியாவில் கார் தயாரிப்பில் களமிறங்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், ஒசாமு சுசூகியோ இந்திய சந்தையை மிகப் பெரிய வாய்ப்பாக பார்த்தார். இந்தியாவில் மிகப் பெரிய கார் சந்தையை உருவாக்க முடியும் என்று நம்பினார். 1978ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனமான சுசூகியின் தலைவராகவும் சிஇஓ-ஆகவும் பொறுப்பேற்றிருந்த ஒசாமா சுசூகி, இந்தியாவுடன் கைகோர்க்க முடிவு செய்தார். அவர் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறார்...
இந்திய சந்தையில் நஷ்டமே மிஞ்சும் என்றெல்லாம் கூறப்பட்டன. அதை எல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. 1982இல் மாருதியும் சுசூகியும் இணைந்தன. குருகிராமில் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. இந்திய மக்களுக்கு ஏற்ற காரை வடிவமைத்தார் ஒசாமு சுசூகி. முதல் தயாரிப்பாக ‘மாருதி 800’ வெளிவந்தது.
அதன் பிறகு நடந்தது வரலாறு. மக்களின் காராக அடையாளம் பெற்ற ‘மாருதி 800’ இந்திய கார் சந்தையில் மிகப்பெரும் புரட்சியை நிகழ்த்தியது. வசதி படைத்தவர்கள் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற சூழலை உடைத்து, நடுத்தர மக்களும் கார் வாங்க முடியும் என்ற சூழலை உருவாக்கினார் ஒசாமு சுசூகி.
அவரது முன்னெடுப்பு இந்திய வாகனத் துறையில் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியது. அவரது பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2007ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது.
“ஒசாமு சுசூகி தொலைநோக்கு பார்வை கொண்டவர். எதிலும் துணிந்து ரிஸ்க் எடுக்கக் கூடியவர். இன்று இந்தியா வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முக்கிய மையமாக உள்ளது. ஒசாமு சுசூகி இல்லையென்றால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது” என்று அவரது பங்களிப்பை நினைவு கூர்கின்றனர் வாகனத் துறையினர்.
இன்று இந்திய வாகனச் சந்தையில் மாருதி சுசூகியின் பங்கு 40 சதவிகிதத்துக்கு மேல். இந்திய மக்களின் கார் கனவை நனவாக்கிய