salam khan and lawrence
salam khan and lawrence pt
இந்தியா

சல்மான் வீட்டில் துப்பாக்கிச்சூடு; உண்மையை ஒப்புக்கொண்ட நிழல் உலக தாதா.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

யுவபுருஷ்

சமீப காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அவ்வப்போது கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில்தான், மும்பை பாந்த்ராவில் நேற்றைய தினம் அதிகாலை நேரத்தில் சல்மான் கானின் வீட்டின் மீது பைக்கில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். அவர்கள் பயன்படுத்திய பைக், ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவரான விஷால் என்பவர், பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கொலையிலும், மே 2022-ல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய கோதாராவுக்கு நெருங்கியவர் என்றும் கூறப்படுகிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கோதாரா நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு, சல்மான் கானை செல்ஃபோனில் தொடர்புகொண்ட மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்த விவகாரம் தொடர்பாக பேசினார். அத்தோடு விசாரணையை தீவிரப்படுத்த, பாதுகாப்பை பலப்படுத்த போலீஸுக்கும் உத்தரவிட்டார். அதேபோல் நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் சல்மான் கான் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் யார்?

சல்மான் கானை கொல்லத்துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் யார்? காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

1993ம் ஆண்டு பஞ்சாப்பில் பிறந்த லாரன்ஸ் பிஷ்னோய், தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு அவ்வப்போது சிறைக்கு சென்று வந்துள்ளார். 2011ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் கவுன்சிலில் இணைந்த இவர், கோல்டி பிரார் என்பவருடன் சேர்ந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அதுமுதல் தற்போது வரை பல முறை சிறை சென்றுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், உள்ளூர் மற்றும் வெளியூர் சிறைக்கைதிகள் என மொத்தமாக 700க்கும் மேற்பட்ட கைதிகள், குற்றவாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்களது திட்டங்களை குழு அமைத்து நிறைவேற்றி வருகிறார். அந்த வரிசையில், கடந்த 2018ம் ஆண்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இவர், சல்மான் கான் விரைவில் படுகொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்தார்.

1998ல் நடந்த சம்பவத்திற்கு பழி!

இதற்கான காரணம் என்னவெனில், 1998-ம் ஆண்டு, ஜோத்பூரில், அரியவகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர், இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கிறார். அந்த மான், தங்கள் சமூகத்தின் புனித விலங்கு என்பதால், அதை கொன்ற சல்மான் கானை பழிவாங்கும் வகையில் அவரை கொல்வோம் என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தார் லாரன்ஸ் பிஷ்னோய்.

தொடர்ச்சியான கொலை மிரட்டல்களால், கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தனது சகோதரர் அன்மல் பிஷ்னோய் மற்றும் தொடர்பில் இருக்கும் குற்றவாளிகளோடு இணைந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது.

இது வெறும் ட்ரெய்லர்தான்!

பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பிஷ்னோய், தனது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் மூலம் திட்டம் தீட்டி அதனை கோதாரா மூலம் செயல்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அன்மோல் பிஷ்னோய் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அன்மோல் பிஷ்னோய், இது வெறும் ட்ரெய்லர். எங்களது திறமையை தெரிந்துகொள்ளுங்கள். இதுவே இறுதி எச்சரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் அன்மோல் பிஷ்னோய் எங்கிருந்து இந்த பதிவை போட்டார். இப்படி திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தனது நலன் விரும்பிகள் யாரும், தற்போதைக்கு வீட்டிற்கு வர வேண்டாம். தவிர்த்துக்கொள்ளலாம் என்று சல்மான் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.