amit shah, Nitish Kumar pt web
இந்தியா

"யாரையும் முதலமைச்சராக நியமனம் செய்வதற்கு நான் யார்?" நிதிஷ் தொடர்பான கேள்விக்கு அமித் ஷா பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் நிதிஷ் முதலமைச்சராக ஆக்கப்படுவாரா என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கும் அமித் ஷா பதிலளித்துப் பேசியிருக்கிறார்.

PT digital Desk

பிகார் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் யார் என்பது குறித்து கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்கள் முடிவு செய்வார்கள் என அமித் ஷா கூறியுள்ளார். யாரையும் முதலமைச்சராக நியமனம் செய்வதற்கு நான் யார் என அவர் பதிலளித்தார்.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமர் மோடி

243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்திருக்கிறது.

தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் முழுமையாக அறிவித்துள்ளன. ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை எதிர்த்து சதீஷ்குமார் யாதவ் போட்டியிடுகிறார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிகாருக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். பரப்புரை கூட்டங்களில் பேசும் அவர் கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்த உள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் பரப்புரைக்காக பிகாருக்கு செல்ல உள்ளனர்.

குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான மோகன் யாதவ் (மத்தியப் பிரதேசம்), புஷ்கர் சிங் தாமி (உத்தரகாண்ட்), பிரமோத் சாவந்த் (கோவா), பஜன் லால் சர்மா (ராஜஸ்தான்) மற்றும் மோகன் சரண் மஜ்ஹி (ஒடிசா) ஆகியோர் பொதுக் கூட்டங்களிலும், வேட்பாளர்கள் பேரணியாக சென்று தங்களது வேட்புமணுக்களை தாக்கல் செய்ய இருக்கும் பேரணிகளிலும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமுனையில் ஐக்கிய ஜனதா தளம் 101 வேட்பாளர்களையும் அறிவித்துள்ள நிலையில் அதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினருக்கு தலா 22 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 15 இடங்களும் பழங்குடியினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 4 இஸ்லாமியர்களுக்கும் ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இத்தகைய சூழலில் பிகாரில் முதலமைச்சர் யாரென்பது குறித்து, தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை எனவும், நிதிஷ்குமார் தலைமையிலேயே தேர்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து, முதல்வர் யாரென்பது குறித்து முடிவு செய்வோம் எனவும் கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமார் பிரதமர் மோடியை அணுகி, பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளதால், அக்கட்சியை சேர்ந்தவரே முதல்வராக வேண்டுமென கூறியதாகவும் அமித்ஷா தெரிவித்தார். ஆனால், நிதிஷ்குமாரின் மேல் இருந்த மரியாதை மற்றும் அவரது அனுபவத்தின் காரணமாக, அவர் முதல்வர் ஆக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நிதிஷ் குமார்

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் நிதிஷ் முதலமைச்சராக ஆக்கப்படுவாரா என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கும் அமித் ஷா பதிலளித்துப் பேசியிருக்கிறார். அப்போது, "யாரையும் முதலமைச்சராக நியமனம் செய்வதற்கு நான் யார்? என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் யார் என்பது குறித்து கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.