மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அந்தக் கூட்டணி, 235 தொகுதிகளைக் கைபற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன. இதனால், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. என்றாலும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போதே தொடங்கிவிட்டது.
குறிப்பாக, யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிவசேனா ஆதரவாளர்கள் மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், தேவேந்திர பட்னாவிஸே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அங்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய முதல்வர் தொடர்பாகப் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “முதல்வரைத் தேர்வு செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் எப்போதும் ஒன்றாக அமர்ந்து முடிவுகளை எடுத்துள்ளோம். தேர்தலுக்குப் பிறகு (முதல்வர் பதவி குறித்து) கூட்டாக முடிவெடுப்போம் என்று தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் ஏக்நாத் ஷிண்டேவும், “முதல்வர் யார் என்பது குறித்த முடிவை பிரதமர் மோடி தேர்வு செய்வார். அவரது விருப்பத்தை அனைத்து கூட்டணித் தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் இன்று டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மஹாயுதி அமோக வெற்றி பெற்றாலும், பாஜக அதிக இடங்களைப் பெற்றிருப்பதால், தமது கட்சி தரப்பிலேயே முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் என அக்கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்கள் அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பலர், முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
அதாவது, தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர். அதனால், அவரை முதல்வராக்க பாஜக மவுனம் சாதிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், பாஜக எம்.எல்.ஏக்களில் பலர் ஏக்நாத் ஷிண்டேவைவிட, பட்னாவிஸுக்குத்தான் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் சிவசேனா தரப்பினர், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மஹாயுதி கூட்டணியின் வெற்றிக்கு ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையே முக்கியக் காரணியாக இருந்தது. இதனால், அவரையே முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த முடிவில் பாஜக தலைமையோ ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர விரும்பவில்லை. அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாஜகவின் தலைமையையும் சிவசேனாவால் புரிந்துகொள்ள முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மகாராஷ்டிரா முதல்வராக ஃபட்னாவிஸ் முதன்மைப் போட்டியாளராக இருந்தாலும், சாதி இயக்கம் தடையாக இருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஷிண்டே மற்றும் பவார் இருவரும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஃபட்னாவிஸ் ஒரு பிராமணர் என அறிக்கை ஒன்று கூறுகிறது. இதனால் முதல்வர் தேர்வுப் படலம் தாமதமாவதாக தெரிவிக்கின்றனர்.
இன்னும் சிலரோ, “கடந்த முறை, பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றபோதும், கட்சியை வளர்க்கவும், ஆட்சியைத் தக்கவைக்கவுமே சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. ஆனால், இந்த முறை அது நடக்காது எனத் தெரிவித்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் இடம் தருவதாகவும் பாஜக உறுதியளித்தபோதும் அதை ஏக்நாத் ஷிண்டே ஏற்கத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் பிரதமரே இறுதி முடிவு எடுக்கட்டும் என ஏக்நாத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்” என்கின்றனர்.